சிரம்பான், பிப்ரவரி 19 (பெர்னாமா) -- 15 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான syabu வகை போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 30 சீன தேநீர் பொட்டலங்களை நெகிரி செம்பிலான் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி, PLUS வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, கிலோமீட்டர் 236.9-தில், இரு உள்நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் வழி அந்நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
அந்நடவடிக்கையில், வாகனம் பழுதுபார்ப்பவர் மற்றும் மீனவராக பணிபுரியும் 30 வயதான இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
சிலாங்கூர், பூச்சோங்கில் இருந்து அந்த போதைப் பொருள் கொண்டு வரப்பட்டு, விற்பனைக்காக தென் பகுதிக்கு கொண்டுச் செல்லப்படுவது, உளவு நடவடிக்கையின் வழி கண்டறியப்பட்டது.
''இந்த கொள்ளளவு ஒரே நேரத்தில் சுமார் 30,000 போதைப்பித்தர்களுக்கு விநியோகிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. எனவே, நடத்தப்பட்ட விசாரணையில், இந்த நடவடிக்கை, 2025 முதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இக்கும்பல் தென் வட்டாரத்தில் உள்ள மாநிலங்களுக்கான சந்தையை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டது'' என்றார் அவர்.
இன்று, மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அத்தகவல்களைக் கூறினார்.
இன்று தொடங்கில் நான்கு நாள்களுக்கு அச்சந்தேக நபர்களின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்படுவதாகவும் அல்சஃப்னி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)