ஜார்ஜ்டவுன், 19 பிப்ரவரி (பெர்னாமா) -- ஆறு வயது மாணவர்கள் முதலாம் வகுப்பில் இணைவது குறித்து எழும் எந்தவொரு பிரச்சனையையும் தெளிவுப்படுத்துவதற்காக, தனியார் மழலையர் மற்றும் பாலர் பள்ளி நடத்துநர்கள் உட்பட பெற்றோர்களுடன் கல்வி அமைச்சு, கே.பி.எம் தொடர்ந்து கலந்தாலோசிப்பை நடத்தும்.
இவ்விவகாரத்தில் இன்னும் திருப்தி அடையாத தனியார் பாலர் பள்ளி நடத்துநர்கள் மற்றும் எந்தவொரு தனிநபரிடமிருந்து எழும் கருத்துகளையும் பெற தமது தரப்பு தயாராக உள்ளதாக, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
தீர்க்கப்படாத பிரச்சனைகள் இன்னும் இருந்தால், அவற்றை ஒவ்வொன்றாக தெளிவுபடுத்தப்படுவதை உறுதிச் செய்ய ஒரு தொடர் கலந்தாலோசிப்பு அமர்வை நடத்துவதில் கல்வி அமைச்சிற்கு எவ்வித சிக்கலுமில்லை என்றும் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
"இன்னும் திருப்தி அடையாதவர்கள் இருந்தால், நாங்கள் தொடர் பேச்சுவார்த்தை அமர்வை நடத்துவோம். அதோடு, முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது எழுப்பப்பட்ட அனைத்து பிரச்சனைகளிலும் கல்வி அமைச்சு அக்கறை கொண்டுள்ளது", என்றார் அவர்.
நேற்று, பினாங்கு, பாயான் பாருவில் உள்ள விஸ்மா பி.கே.ஆர்-இன் மாநில அளவிலான மடானி சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
புதிய பள்ளி பாடத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஏற்ப 2027-ஆம் ஆண்டு தொடங்கி ஆறு வயது மாணவர்கள் முதலாம் வகுப்பில் இணைவதற்கான நடைமுறைகள் குறித்து விவாதிக்க, தனியார் பாலர் பள்ளி நடத்துநர்களுடன் கல்வி அமைச்சு ஒரு கலந்துரையாடல் அமர்வை நடத்தியதாக, முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)