Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

இரு கலாச்சாரங்களையும் ஒன்றிணைத்து ஒரு குடும்பமாக தொடரும் உறவு...

19/02/2026 05:11 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 19 (பெர்னாமா) -- சீனரும் தமிழரும் இணைந்து, தனி ஓர் அடையாளமாக இருப்பது பெருமை என்றாலும், அது சவால்கள் நிரம்பிய ஒரு பயணம்தான்.

அவர்கள் சந்திக்கும் சவால்களும் கடமையும் இரு கலாச்சாரங்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக மாறி, பல தலைமுறைகளை ஒன்றுபடுத்தும் உறவாகவும் வளர்கிறது.

அந்த வகையில், இரு கலாச்சாரங்களையும் பின்பற்றி வருவதில் இருக்கும் பொறுப்புகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றார் கோலாலம்பூரைச் சேர்ந்த சத்தியப்பிரமான ஆணையர் சுமித்ரா ஒந்த்ரொஜாமி.

இரு கலாச்சாரங்களையும் சமநிலைப்படுத்த வேண்டியது, இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் முக்கிய பொறுப்பாக இருந்து வருகிறது.

குறிப்பாக, பண்டிகைகள், இறை வழிபாடு என்று பல அம்சங்களில் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.

சற்று குழப்பமாக இருந்தாலும், இரு தரப்பிலும் பிரச்சனைகள் ஏதுமின்றி, முறையாக பின்பற்ற கவனம் செலுத்துவதாக சுமித்ரா ஒந்த்ரொஜாமி தெரிவித்தார்.

''சில அம்சங்கள் கலாச்சார அடிப்படையில் முற்றிலும் மாறுபட்டிருக்கும். சில அம்சங்கள் தமிழ் கலாச்சாரப்படி ஏதுவாக இருந்தாலும், சீன கலாச்சாரப்படி எதிராக இருக்கும். அந்தத் தருணத்தில் எந்தக் கலாச்சாரத்தை பின்பற்றுவது என்பது குழப்பமாக இருக்கும்'' என்றார் அவர். 

சீன மொழி நன்றாக புரியும் என்றாலும் ஓரளவு மட்டுமே பேசத் தெரியும் என்றுகிறார் முன்னாள், பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவியான சுமித்ரா.

மொழி ரீதியாக மற்றவர்கள் தம்மிடம் தொடர்பு கொள்வதில் குழப்பம் அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதோடு, சீனரும் தமிழரும் சேர்ந்த அடையாளமாக சமுதாயத்தில் பயணிப்பதை சுவாரஸ்யமான அனுபவமாக கருதுகிறார்.

''சில இடங்களில் எனக்கு சீன மொழி தெரியும் என்று தெரியாது. என் முன்னிலையில் சீன மொழியில் பேசுவது வேடிக்கையாக இருக்கும். நிறையப் பேருக்கு என்னைப் பார்த்து சந்தேகம் எழுந்துள்ளது. சிலர் என்னை மலாய் பெண் என்றும் நினைத்தது உண்டு. ஏனென்றால், நான் சரளமாக மலாய்மொழி பேசுவேன். பிறகு நான் அவர்களிடம் விளக்கமளிப்பேன். அப்பா தமிழர், அம்மா சீனர் என்று கூறுவேன்'' என்றார் அவர். 

இதனிடையே, இரு கலாச்சாரங்களைப் பின்பற்றும் போது குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

அதில், தமிழரான தமது கணவர் சீனப்பெருநாளைக் கொண்டாடுவதில் செலுத்தும் ஆர்வமும், தமக்கு வழங்கும் ஒத்துழைப்பும் சிறந்த ஊக்குவிப்பாக இருப்பதாக அவர் கூறினார்.

சீனப்புத்தாண்டை முன்னிட்டு, பெர்னாமாவின் பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)