Ad Banner
Ad Banner
 பொது

ரமலான் காலத்தில் 'சாரா' தொகை உதவியாக உள்ளது

18/02/2026 06:31 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 18 (பெர்னாமா) -- ரமலான் காலம் முழுவதும் sahur உணவுகளைத் தயாரிப்பதற்கும், நோன்புத் திறப்பதற்கான அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கும், பிப்ரவரி 9ஆம் தேதி விநியோகிக்கப்பட்ட ரஹ்மா அடிப்படை உதவித் தொகை, 'சாரா' முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 'சாரா' உதவித் தொகை, மாதாந்திரச் செலவுகளின் சுமையைக் குறைக்க உதவியுள்ளதோடு, குறிப்பாக ரமலான் மற்றும் நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை எதிர்கொள்வதிலும் துணைப் புரிந்துள்ளதாக பெர்னாமாவிடம் சிலர் கூறினர்.

அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் இந்த உதவி, அடிப்படை பொருள்களை வாங்கிக் கொள்வதற்கு துணைப் புரிவதை விடுத்து, குடும்பத் தேவைகளை மிகவும் திட்டமிட்ட முறையில் நிர்வகிக்க வழிவகுப்பதாக அவர்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.

"வெங்காயம், மாவு மட்டுமல்ல அனைத்து சமையல் பொருட்களும் அடங்கும். உலர்ந்த வகைப் பொருட்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் அல்லவா? அதுதான். ஒரு முறை மட்டுமே வாங்கிக் கொள்வதாகும். இதற்காக அடிக்கடி கடைக்குச் செல்ல வேண்டியதில்லையே," என்றார் சலெஹா இட்ருஸ்.

இதனிடையே, இந்த 'சாரா' உதவி தனக்கும் தனது குடும்பத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளதாகக் கூறிய நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான வியாபாரி ஒருவர், தற்போது தமது நிலையற்ற வருமானத்திற்கு இது உதவியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

"நாளை நோன்பு தொடங்குகிறது அல்லவா? எனவே சமையல் பொருள்கள் வாங்கப் பயன்பட்டது. அரசாங்கத்தின் இந்த உதவி பயனாக உள்ளது. அரசாங்கத்தின் இந்த சாரா திட்டத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் நாளை தொடங்கும் நோன்பை முன்னிட்டு இது மக்களுக்குப் பயனளிக்கும்," என்றார் முஹமட் ஃபௌவுசி மாமாட்.

சுமார் 81 லட்சம் மக்கள் சாரா உதவித் தொகையைப் பெற்றுள்ளதாவும், இத்திட்டத்திற்காக 78 கோடி ரிங்கிட் மொத்த செலவு ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்சா அசிசான் முன்னதாக தெரிவித்திருந்தார்.

மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதில் அரசாங்கத்தின் அணுகுமுறையின் செயல்திறனை இது பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)