குளுவாங், பிப்ரவரி 18 (பெர்னாமா) -- நீண்டகாலமாக நீடித்து வந்த தலைமைத்துவ நெருக்கடி மற்றும் கட்சித் தலைமைத்துவம் அதை விவேகத்துடன் கையாளத் தவறியது ஆகியவற்றைத் தொடர்ந்து ஜோகூரில் உள்ள பெர்சத்து கட்சியின் 11 தொகுதி தலைவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
பொந்தியான், சிம்பாங் ரெங்காம், செம்புரோங், மெர்சிங், ஜோகூர் பாரு, பெங்கேராங், லாபிஸ், தஞ்சோங் பியாய், ஶ்ரீ காடிங், லெடாங் மற்றும் பூலாய் ஆகியவையே அந்தத் தொகுதிகளாகும்.
அவர்களின் பதவி விலகல், மறைமுகமாக சம்பந்தப்பட்ட அனைத்து தொகுதிகளையும் கலைக்க வழிவகுத்ததாக அத்தொகுதிகளின் தலைவர்களை பிரதிநிதிக்கும் பொந்தியான் தொகுதி தலைவர் டத்தோ இஷா அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
மெர்சிங் மற்றும் லாபிஸ் தொகுதி தலைவர்கள் தங்களின் அதிகாரப்பூர்வப் பதவி விலகல் கடிதங்களை கட்சி பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் அலிக்கு அனுப்பிவிட்ட வேளையில், இதர தொகுதிகளின் தலைவர்கள் விரைவில் அனுப்பவுள்ளனர்.
தொகுதித் தலைவர்களையும் அடிமட்ட உறுப்பினர்களையும் ஒன்றிணைக்க பெர்சத்து கட்சி தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசினும், ஜோகூர் பெர்சத்து தொடர்புப் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் ஷருடின் ஜமாலுலும் தவறியதைத் தொடர்ந்து, குறிப்பாக மாநிலத் தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், தொடர்ந்து இப்பதவியை வகிப்பதற்கான நம்பிக்கையை அவர்கள் இழந்துள்ளனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட இக்குழு தனித்தனியாகச் செயல்படாது என்றும், இனிமேல் மற்ற கட்சிகளிடமிருந்து அழைப்புக் கிடைத்தால் எந்தவொரு முடிவும் ஏகமனதாக எடுக்கப்படும் என்றும் ஜோகூர் பாரு தொகுதி முன்னாள் தலைவர் டத்தோ சுல்கிப்ளி டத்தோ சுல்கிப்ளி பூஜாங் கூறினார்.
முன்னதாக, பெர்சத்து கட்சியின் சில உச்சமன்ற உறுப்பினர்கள் உட்பட 17 பேரை பதவியில் இருந்து நீக்கியது.
கட்சியின் இந்தத் தலைமைத்துவ நெருக்கடியினால், நாடு முழுவதிலும், இதுவரை பெர்சத்துவின் 22 தொகுதிகள் கலைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, திரெங்கானு, டுங்குனில் 13 கிளைகளைச் சேர்ந்த 1,880 உறுப்பினர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, புதன்கிழமை அத்தொகுதியும் கலைக்கப்பட்டதாக, அதன் முன்னாள் பெர்சத்து தலைவர் டத்தோ அப்துல் அசிஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.
பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை மற்றும் ஆதரவை இழந்த பின்னர், இக்கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
''மகளிர் மற்றும் இளைஞர் பிரிவின் அனைத்து செயற்குழுவினரும் இன்று ஒன்றிணைந்து புத்ரி பிரிவு உட்பட மூன்று பிரிவுகளையும் கலைப்பதற்கு இணக்கம் தெரிவித்தன. அதன் பொருட்டு, இன்று கூடியிருந்த அனைத்து செயற்குழுவினரும் பெர்சத்துவின் டுங்குன் தொகுதியைக் கலைக்க ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்,'' என்றார் அவர்.
மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைக் குறித்து கருத்துரைத்த அவர், விரைவில் புதிய அரசியல் தளத்திற்கு மாறுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)