கோலாலம்பூர், 16 பிப்ரவரி (பெர்னாமா) -- தற்போது நாட்டில் அதிகரித்து வரும் TB எனப்படும் காசநோய்ச் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காற்றின் மூலம் பரவும் இத்தொற்று நோய், சிகிச்சையின் மூலம் குணமாகக் கூடியதாய் இருந்தாலும், தொடக்கத்திலேயே கண்டறியப்படா விட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், இத்தொற்றினால் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை போன்ற விவரங்களை விரிவாகக் காண்போம்.
உலக மக்களிடையே, குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் இத்தொற்றினால் எளிதில் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம், WHO-வின் தரவுகள் கூறுகின்றன.
அதுமட்டுமின்றி, 2024-ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 12 லட்சத்து 30,000 பேர் இந்த காசநோயினால் உயிரிழந்ததாகவும் அதன் தரவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் இருமல், உடல் எடை குறைதல், உணவின் மீதான விருப்பமின்மை போன்றவை, காசநோயிற்கான அறிகுறிகளாக இருக்கக்கூடும் என்று குடும்பநல மருத்துவர் டாக்டர் கோகிலவாணி சேகர் சந்திரன் தெரிவித்தார்.
''இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் இருமல், அதில் இரத்தம், அதிகமான சோர்வு, இரவு நேரங்களில் அதிக வேர்வை, உணவு உட்கொள்ள முடியாமல் போனால் அவர்களுக்கு காசநோய் கண்டிருக்கலாம். இது ஒரு கிருமித் தொற்று. இது காற்றின் மூலம் பரவுவதால் இருமல் அல்லது தும்மல் மூலம் மற்றொருவருக்கு இந்நோய்ப் பரவும் சாத்தியம் அதிகம் உள்ளது,'' என்றார் அவர்.
அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் இலவச பரிசோதனையும் சிகிச்சையும் வழங்கப்படும் வேளையில், தொடக்கக் கட்டத்திலேயே பரிசோதனை செய்துகொள்வது அதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முதன்மை வழி என டாக்டர் கோகிலவாணி வலியுறுத்தினார்.
காசநோய் முழுமையாக குணப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் முறையான சிகிச்சையின்றி, அதாவது வழங்கப்படும் மருந்துகளை முறையாகவும் முழு கால அளவிலும் உட்கொள்ளாத நிலை ஏற்பட்டால், இந்நோயை குணப்படுத்துவது கடினம்.
சிகிச்சையை பாதியிலேயே நிறுத்துவது Drug Resistant TB எனப்படும் மருந்து எதிர்ப்பு காசநோயாக மாறக்கூடும் என்று அவர் விவரித்தார்.
''சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளும் சிகிச்சையகங்களும் இலவசமாகவே அதற்கான பரிசோதனைகளை செய்கிறார்கள். காசநோய் கண்டிருந்தால் இலவச சிகிச்சையும் வழங்கப்படுகிறது,'' என்றார் அவர்.
சுவாசக்கவசம் அணிதல், நெருங்கிய தொடர்பை தவிர்த்தல், காற்றோட்டமான சூழலை பராமரித்தல் போன்ற எளிய நடவடிக்கைகளும் இத்தொற்று பரவலைத் தடுக்கும் என்று பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்டபோது கோகிலவாணி விளக்கமளித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]