Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

வழக்கம் போல் கடமைகளைத் தொடர்வேன் - அசாம் பாக்கி

15/02/2026 04:14 PM

சிப்பாங், 15 பிப்ரவரி (பெர்னாமா) --  குற்றச்சாட்டுகள் மற்றும் பல்வேறு கருத்துகள் தம் மீது வைக்கப்பட்டாலும், விடுப்பு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், வழக்கம் போல் கடமைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவிருப்பதாகவும் டான் ஸ்ரீ அசாம் பாக்கி வலியுறுத்தியிருக்கிறார்.

இதுவரை தம் மீது எந்த குற்றவியல் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாததால், விடுப்பு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-இன் தலைமை ஆணையரான அசாம் பாக்கி விளக்கம் அளித்துள்ளார்.

''நான் விடுமுறை எடுக்க வேண்டிய அவசியமில்லை. நான் விடுமுறை எடுக்க விரும்பினால், நீதிமன்றத்தில் இப்போது எத்தனை பேர் குற்றம் சாட்டப்பட்டு இன்னும் பணியில் இருக்கிறார்கள். நிதியமைச்சர் கூட இன்னும் பணியில் உள்ளார். என்ன பிரச்சனை? நான் ஒரு குற்றவாளியா?'', என்றார் அவர்.

ஞாயிற்றுக்கிழமை, சிலாங்கூர் சிப்பாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை வெளிப்படையாக மேற்கொள்ளும் என்று அசாம் பாக்கி நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது உட்பட விசாரணையில் தாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே, மூத்த அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 111 கோடி ரிங்கிட் மதிப்புள்ள முதலீட்டு முறைகேடு தொடர்பான கூடுதம் விளக்கங்களை இனி எஸ்.பி.ஆர்.எம்-இன் நடவடிக்கை பிரிவு துணைத் தலைமை ஆணையர் டத்தோ முஹமட் குசைரி யஹ்யா வழங்குவார் என்று டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார்.

அது தொடர்பான வழக்கு தற்போதுதான் பதிவாகியிருப்பதால் விசாரணையின் அண்மைய நிலை குறித்து தாம் எந்த தகவலையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் விவரித்தார்.

''எனது துணைத் தலைவர் பின்னர் கருத்து தெரிவிப்பார். ஏனென்றால் இது இப்போதுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் எனக்கு அண்மைய தகவல்கள் எதுவும் இல்லை. அவர் உண்மையில் விசாரணையைத் தொடங்கியுள்ளாரா, யார் அழைக்கப்படுவார்கள் என்பது போன்றவை. நான் அதைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை'', என்று அவர் கூறினார்.

முன்னாள் மூத்த அமைச்சர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 111 கோடி ரிங்கிட் முதலீட்டு முறைகேடுகள் தொடர்பாக மூன்று அரசு சாரா நிறுவனங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை, எஸ்.பி.ஆர்.எம் ஆய்வு செய்து வருவதாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)