Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

சிவபெருமானின் அருள் நிறைந்த மகா சிவராத்திரி

15/02/2026 05:30 PM

கோலாலம்பூர், 15 பிப்ரவரி (பெர்னாமா) --  மகா சிவராத்திரி.

பரம்பொருளான சிவபெருமானின் அருள் நிறைந்த இரவாகும்.

இந்நாளை உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், குறிப்பாக சிவ பக்தர்கள், சிவனருள் வேண்டி வீட்டிலும் ஆலயத்திலும் சிறப்பு வழிப்பாடுகளை மேற்கொள்வார்கள்.

சிவபெருமான், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்தி என்பதால் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாளில் மகாசிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இறை சிந்தனை, விரதம், தவம் மற்றும் பக்தி நிறைந்த இந்த புனித இரவு, ஆன்மாவின் விழிப்புணர்வை எழுப்பும் ஒரு தெய்வீக தருணமாக கருதப்படுகின்றது.

சைவ மரபின்படி, இந்நன்நாளில் சிவபெருமானுக்கு அபிஷேகம், ருத்ர-பாராயணம், பஜனை போன்ற சிறப்பு வழிப்பாடுகள் நடைபெறும்.

மகா பூஜை அபிஷேகங்கள் நடக்க, பஞ்சாட்சர மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்கள் தேவாரம், திருப்புகழ், திருவாசம், திருப்பாவை மற்றும் திருவெம்பாவை என்று சிவன் புகழ் பாடும் பாமலைகளைப் பாடி பரவசத்தில் இருப்பார்கள்.

சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு பால், தயிர், திரவியப் பொடி, அரிசிமாவு, தேன், விபூதி, சந்தனம், நெல்லிப்பொடி முதலான அபிஷேகப் பொருட்களை வாங்கிக்கொடுத்து பக்தர்கள் இவ்வழிபாட்டில் கலந்துகொள்வர்.

விடிய விடிய கண்விழித்து அபிஷேக ஆராதனைகளைத் தரிசனம் செய்பவர்களுக்குக் கர்மவினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாவதால், பக்தர்கள் இந்த ஒரு நாள் இரவில் தூக்கத்தை தியாகம் செய்து சிவருமானை வழிபடுவது வழக்கம்.

எனவே, பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள சிவன் ஆலயங்களில் திரண்டு பக்தி நெறியோடு இந்நாளை சிறப்பாக அனுசரித்து வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)