கோலாலம்பூர், 15 பிப்ரவரி (பெர்னாமா) -- பெர்சத்து கட்சியின் லெம்பா பந்தாய் மற்றும் லாருட் தொகுதிகள் உடனடியாகக் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவரான டான் ஶ்ரீ முஹிடின் யாசின் மீதுள்ள நம்பிக்கை இழந்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக, லாருட் தொகுதியின் பெர்சத்து தலைமைத்துவம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளது.
லாருட் தொகுதியின் அனைத்து மட்டங்களில் உள்ள உறுப்பினர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெற்றப் பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அத்தொகுதியின் துணைத் தலைவர் முஹமட் நோ முஹமட் டாவுட் தெரிவித்தார்.
''மொத்தம் 48 கிளைகள் இதன் மூலம் பெர்சத்து லாருட்டின் கலைப்பை அறிவிக்கின்றன. ஏனெனில், டான் ஸ்ரீ முகிடின் தலைமையிலான பெர்சத்து மலேசியாவின் தலைமை மீதான நம்பிக்கை இழந்ததே காரணமாகும். துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் மற்றும் பெர்சத்து லாருட் தலைவர் முகமட் ஹசுண்டி ஹம்சா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதினால் இது மேலும் வலுப்படுத்தப்பட்டது'', என்றார் அவர்.
இதனிடையே, இம்முடிவு எந்தவொரு வற்புறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டதல்ல என்று கூறிய பெர்சத்துவின் லெம்பா பந்தாய் தொகுதி தலைவர் டத்தோ முக்காரபின் மொக்தாருடின், இது குறித்து அக்கட்சியின் தலைமையகத்திடம் கூடியவிரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
''எங்களுக்கு கிடைத்த வாய்ப்பிற்கு பெர்சத்துவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அரசு சாரா நிறுவனங்கள், அல்லது வேறு வழியாக தொகுதி மக்களுக்கு எங்கள் சொந்த வழியில் தொடர்ந்து பங்களிப்போம். தொடர்ந்து முன்னேறுவோம். மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம். வாய்ப்பிருந்தால் நாம் மீண்டும் வேறு தளத்தில் சந்திப்போம்'' என்று கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் மற்றும் கட்சியின் உச்சமன்ற தலைமைத்துவ செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 17 பேர் கடந்த வெள்ளிக்கிழமை அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)