கோலாலம்பூர், பிப்ரவரி 14 (பெர்னாமா) -- இவ்வாண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு ETS (ஈ.டி.எஸ்) எனப்படும் மின்சார ரயில் சேவைக்கான 183,000 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
இது, Keretapi Tanah Melayu நிறுவனம், KTMB (கே.தி.எம்.பி) பதிவு செய்த அதிகபட்ச எண்ணிக்கைகளில் ஒன்றாகும்.
தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனம், APAD அங்கீகரித்த மற்றொரு புதிய ஈ.டி.எஸ் 3-ஐ சேர்ப்பதன் வழி, பண்டிகைக் காலம் முழுவதும் 16 கூடுதல் பயணங்களை அறிமுகப்படுத்த வழிவகுக்கிறது.
இதன் மூலம் நாளொன்றுக்கு 58 ஈ.டி.எஸ் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
பிப்ரவரி 13 முதல் 22ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், ஒரு லட்சத்து 31 ஆயிரம் அசல் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 44,000 கூடுதல் ஈ.டி.எஸ் டிக்கெட்டுகளும் 7,000க்கும் மேற்பட்ட EMUPlus டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டதாக லோக் கூறினார்.
இதன்வழி, மொத்தம் 183,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
"திட்டமிடப்பட்ட ஈ.டி.எஸ் டிக்கெட்டுகளின் விற்பனை நிலை, கிட்டத்தட்ட அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதே வேளையில், எங்கள் கூடுதல் டிக்கெட்டுகள் இன்னும் சில மீதமுள்ளன. ஏனென்றால் நான் சொன்னது போல், எங்களுக்குப் புதிய ரயில்கள் கிடைத்துள்ளதால் நாங்கள் தொடர்ந்து பயணங்களை இணைப்போம். எனவே, அடுத்த பயணத்தைச் சேர்ப்போம்," என்றார் அவர்.
2026 சீனப் புத்தாண்டை முன்னிட்டு, கோலாலம்பூரில் கே.தி.எம்.பி பயணிகளைச் சந்தித்தபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, பயணிகளுக்கான காத்திருப்பு மற்றும் பயண நேரத்தைக் குறைக்க, சிரம்பான் மற்றும் கோலாலம்பூர் இடையிலான ரயில் அட்டவணையை ஆராய்ந்து, மறுசீரமைப்பதன் மூலம் கே.தி.எம் பயணிகள் சேவை நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்று லோக் தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டுக்குப் பிறகு, பொதுமக்களின் வசதியை உறுதிசெய்து, தணிப்பு நடவடிக்கைகளை விரிவாக செயல்படுத்துவதற்கு தங்கள் தரப்பு கலந்துரையாடல்களை நடத்தவிருப்பதாகவும் அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)