Ad Banner
 பொது

ஆறு வயதில் முதலாம் ஆண்டு; தனியார் பாலர் பள்ளி நடத்துநர்களுடன் கலந்தாலோசிப்பு

12/02/2026 07:48 PM

நிபோங் திபால், 12 பிப்ரவரி (பெர்னாமா) --  புதிய பள்ளி பாடத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்ப 2027-ஆம் ஆண்டு தொடங்கி ஆறு வயது குழந்தைகளை முதலாம் ஆண்டில் சேர்ப்பதை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க, தனியார் பாலர் பள்ளி நடத்துநர்கள் உடன் கலந்தாலோசிப்பு நடத்தப்பட்டது.

அக்கொள்கை அமலாக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய பாலர் பள்ளி நடத்துநர்களுடன் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்கு அந்த கலந்தாலோசிப்பு நடத்தப்பட்டதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்தெரிவித்தார்.

ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக அக்கொள்கை விவரிக்கப்படுவதால் தனியார் பாலர் பள்ளி நடத்துநர்கள், ஒட்டுமொத்தமாக அதற்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்ததாக ஃபட்லினா கூறினார்.

இருப்பினும், பாலர் பள்ளியிலிருந்து ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கான மாறுதல் காலக்கட்டத்திற்கான ஒருங்கிணைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட பல ஐயங்களையும் அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

''அவர்கள் எழுப்பிய பிரச்சனைகள், அவர்களின் ஐயங்கள் ஆகியவற்றை அமைச்சு கவனிப்பது அவசியமானது என்று நான் நினைக்கிறேன். இதனால் நாம் ஒன்றாக இணைந்து சிறந்த வழியைக் கண்டுபிடிப்போம். ஏனென்றால், அவர்கள் எங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். நான் அவர்களுக்கு மிக்க நன்றி கூறுகிறேன். மேலும், என்னென்ன பிரச்சனைகள் எழுப்பப்படுகின்றன என்பதையும் பார்ப்போம், குறிப்பாக இந்த மாணவர் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புடையவை'', என்றார் அவர்.

இன்று, பினாங்கில் உள்ள அனைத்து பாலர் பள்ளிகளுக்கும் Smartboard மற்றும் இலவசமாக UHT Farm Fresh Grow பெட்டிப்பால் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்லினா அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)