கோலாலம்பூர், 12 பிப்ரவரி (பெர்னாமா) -- அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தல விவகாரம் ஆலயங்களை மட்டும் உட்படுத்தி இல்லை.
மாறாக, சீனக் கோவில்கள், தேவாலயங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கி இருக்கும் நிலையில், இவ்விவகாரத்தைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வழிபாட்டுத் தலங்கள் உட்பட அனைத்து விவகாரத்திலும் நாட்டில் அதற்கேற்ற சட்ட விதிமுறைகள் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அவற்றை பின்பற்றினால் எவ்வித பிரச்சனையும் எழாது என்றும் தெரிவித்தார்.
''இது ஆலயங்களுக்கு மட்டுமல்ல. மாறாக, அனைத்து விவகாரங்களுக்கும் பொருந்தும். நம் நாட்டில் விதிமுறைகள், சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றை பின்பற்ற வேண்டும். இதில், சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். அவற்றை ஒன்றிணைந்து அமர்ந்து பேசி தீர்ப்போம். கோவில், சூராவ், பள்ளிவாசல், சீன ஆலயம், தேவாலயம் போன்றவை சம்பந்தப்பட்டது உட்பட வேலை, உயில், கார் ஓட்டும்போது, வேலை செய்யும்போது என்று அனைத்திற்கும் விதிமுறை உள்ளது. நாம் அந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்,'' என்றார் ரமணன்.
அதேவேளையில், இவ்விவகாரத்தில் உள்ள பிரச்சனையை அடையாளம் கண்டு, ஒன்றாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வு காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாறாக, இப்பிரச்சனையை சில தரப்பினர் பெரிதுப்படுத்தி வருவது குறித்து வருத்தம் தெரிவித்த ரமணன், தர்மா மடானி திட்டத்தின் கீழ் ஆயிரம் ஆலயங்களுக்கு இரண்டு கோடி ரிங்கிட் உட்பட அரசாங்கம் ஆலயங்களுக்கு வழங்கிய சிறப்பு நிதிகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
''கடந்தாண்டு 3.5 மில்லியன் ஆயலங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும், 50,000 மற்றும் ஒரு லட்சம் என்று பிரதமர், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழும் ஆலயங்களுக்கு நிதி வழங்கியுள்ளோம். இவ்வாண்டும் அதேபோன்று வழங்கப்படவிருக்கிறது. ஆனால், அதுபோன்ற நல்ல விஷயங்களைப் பற்றி பேசாமல், மீண்டும் மீண்டும் பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறோம்,'' என்று அவர் கேள்வி எழுப்பினார்
எனவே, இவ்விவகாரத்தை பெரிதுப்படுத்தாமல், அதற்கான தீர்வை காண்பதே முதன்மையானது என்றும் ரமணன் குறிப்பிட்டார்.
இன்று, கோலாலம்பூரில், மலேசிய இந்திய திறன் பயிற்சி திட்டம், 2.0-இன் பட்டமளிப்பு விழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர் ரமணன் செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)