கோலாலம்பூர், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- நாட்டில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை துடைத்தொழிக்கும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையை முடக்குவதற்கான அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக பறிமுதல் செய்யப்பட்ட நிதியின் மதிப்பு கோடி கணக்கான ரிங்கிட்டை எட்டியுள்ளதாக, நிதி அமைச்சருமான அவர் கூறினார்.
எனினும், இதனை எதிர்த்துப் போராடுவதில் பல சவால்களை இருப்பதையும் அவர் மறுக்கவில்லை.
''இணைய ஊடகங்கள் சில நேரங்களில் வெளிநாடுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இது எளிதானதல்ல. இரண்டாவதாக, மின்னணு வழிமுறை மிகவும் நுட்பமானது. இது ஒரு நொடியில் திறந்து பின்னர் மூட முடியும். இது இரண்டு படிகளை உள்ளடக்கியது. முதலாவது அமலாக்கம், இரண்டாவது மக்களின் நலனுக்கான பொறுப்புக்கூறல்,'' என்றார் அவர்.
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான அமலாக்க நடவடிக்கைகளை தவிர, நாட்டின் சட்டங்களுக்கு எதிரான விவகாரங்கள் குறித்து மக்களிடையே பொறுப்புணர்வையும் விழிப்புணர்வையும் அதிகரிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]