கோலாலம்பூர், பிப்ரவரி 11 (பெர்னாமா) -- கல்வி, பொருளாதாரம் உட்பட பல்வேறு ரீதியில் மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.
அவர்களின் எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் ''மக்கள் கொள்கை அறிக்கை 2.0'' எனும் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் முயற்சியில் மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பு,GBM மீண்டும் களமிறங்கியுள்ளது.
நாடு முழுவதும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கருத்துகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், மக்களின் கோரிக்கைகளையும் முன்மொழிவுகளையும் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி வருவதாக மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பத்மநாதன் சிவபிரகாசம் தெரிவித்தார்.
''மக்களுக்கு என்ன வேண்டும் இந்த அரசாங்கத்திடம் இருந்து. அதனைப் பதிவு செய்யத்தான் இந்தத் திட்டத்தை இன்று அறிமுகம் செய்கிறோம். நாங்கள் google,form, தொடர்பு எண்களை அனைத்தையும் வழங்குவோம். அதன் மூலம் தகவல்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அதன் மூலம் அரசாங்கம் நமது தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். அதுதான் அதன் நோக்கம்,'' என்றார் அவர்.
15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ''மக்கள் கொள்கை அறிக்கை 1.0'' திட்டத்திற்கு இந்திய சமுதாயம் உட்பட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்த முன் வந்தனர்.
சமூக அமைப்புகள், நிபுணர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் சிறப்பாக பங்களித்திருந்த நிலையில், இம்முறையும் அது தொடரும் என்று எதிர்பார்ப்பதாக பத்மநாதன் குறிப்பிட்டார்.
''நாம் என்ன தேவை என்று பல கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். ஏறக்குறைய 60 விழுக்காடு தீர்வுக் காணப்பட்டிருக்கின்றது. எஞ்சியவைகளை இன்னும் ஒன்றை ஆண்டுகளில் எப்படி செய்வார்கள் என்று தெரியவில்லை, அதனால்தான், ''மக்கள் கொள்கை அறிக்கை 2.0'' திட்டத்தை அறிமுகம் செய்கிறோம். எனவே, மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கலாம். நாங்கள் அதனை அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்குக் கொண்டுச் செல்வோம்,''என்றார் அவர்.
இவ்வாண்டு பிப்ரவரி முதல் ஜூலை வரையில், பொதுமக்கள் சந்திப்புகள், கருத்துக் கணிப்புகள், கருத்தரங்குகள், நேர்காணல்கள் மற்றும் குழு விவாதங்கள் மூலம் மக்களின் கருத்துகளை கண்டறியும் நடவடிக்கையில் தங்களது தரப்பு தீவிரமாக செயல்படும் என்றும் பத்மநாதன் தெரிவித்தார்.
''சபா மற்றும் சரவாக் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கண்டறிவோம். அவற்றை ஒன்றிணைத்து ஜூலை மாதத்திற்குள் திட்ட வரைவை வெளிப்படுத்துவோம்,''என்றார் அவர்.
இது குறித்து தகவல்களைப் பெறுவதற்கு www.manifestorakyat.my அல்லது www.gbmamalaysia.org.my அகப்பக்கங்களை வலம் வரலாம்.
இன்று சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ''மக்கள் கொள்கை அறிக்கை 2.0'' எனும் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பத்மநாதன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)