Ad Banner
 பொது

மக்களுக்குச் சுமை தரும் 'மிதவை விலை' அணுகுமுறை இல்லை

11/02/2026 03:13 PM

கோலாலம்பூர், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- பெரும்பாலான மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் என்பதால் உலக வங்கி மற்றும் பல பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்தபடி மிதவை விலை அணுகுமுறையை அரசாங்கம் தேர்ந்தெடுக்கவில்லை.

மாறாக, 85 விழுக்காட்டு மக்களை உட்படுத்திய இலக்கிடப்பட்ட உதவித் தொகைகளின் வழி, பெட்ரோலுக்கு 600 கோடி ரிங்கிட்டையும் டிசலுக்கு 500 கோடி ரிங்கிட்டையும் அரசாங்கம் சேமித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இது நாட்டிற்கு ஒரு நல்ல செய்தியாகும் என்று கூறிய நிதி அமைச்சருமான அன்வார் இப்ராஹிம், பொதுமக்களின் ஏற்றுக் கொள்ளலில் உள்ள அபாயங்கள் மற்றும் சவால்களைக் கருத்தில் கொண்டு, இலக்கிடப்பட்ட உதவித் தொகையைச் செயல்படுத்துவதில் பல நாடுகள் துணிவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

''நாங்கள் விலையை நிர்ணயிக்கும்போது, ​​ஒரு குடும்பத்திற்கு சுமார் 13,000 ரிங்கிட் என்று வைத்துக்கொள்வோம்; மீதமுள்ளவை உதவியாக வழங்கப்படும். ஆனால் அது மக்களுக்கு அதிகச் சுமையை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைக்கிறோம். இது கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். ஆனால் மக்களின் நலனை அதிகம் பாதிக்காது. அதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை,'' என்றார் அவர். 

இன்று மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது பிரதமர் அதனைக் கூறினார்.  

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]