பத்து காஜா, பிப்ரவரி 10 (பெர்னாமா) -- பத்து காஜா மற்றும் லெங்கொங்கில் நேற்றிரவும், இன்று அதிகாலையும் நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில், வயதான மாது ஒருவர் உட்பட மூன்று பெண்கள் பலியாகினர்.
பத்து காஜா அருகில் உள்ள ஜாலான் தஞ்சோங் துவாலாங்கில் நிகழ்ந்த விபத்தில், 34 மற்றும் 65 வயதான இரு பெண்கள் உயிரிழந்ததாக பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் சபாரொட்சி நோர் அஹமட் தெரிவித்தார்.
புரோடுவா மைவி மற்றும் டொயாட்டா ஹைலக்ஸ் ரக வாகனங்களை உட்படுத்தி நிகழ்ந்த இவ்விபத்து குறித்து இரவு மணி 9.45-க்கு தமது தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சபாரொட்சி கூறினார்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததும், புரோடுவா மைவி ஓட்டுநரும் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்மணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அவர்களின் சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் சபாரொட்சி குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, இன்று அதிகாலை மணி 3.56 அளவில், லெங்கோங் அருகே ஜாலான் பாலிங்-கோலா கங்சார் சாலையில், புரோடுவா பேசாவை உட்படுத்திய இரண்டாவது விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி சம்பந்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வாகனத்தில் சிக்கிக் கொண்ட பெண்மணி ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக சபாரொட்சி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)