Ad Banner
 பொது

செந்தூலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் பெண்ணின் உடல் மீட்பு

10/02/2026 07:10 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 10 (பெர்னாமா) -- திங்கள்கிழமை, கோலாலம்பூர், ஜாலான் செந்தூலில் உள்ள செந்தூல் மெதடிஸ் ஆண்கள் இடைநிலைப்பள்ளி முன்புறத்தில், இன்னும் அடையாளம் காணப்படாத, வீடற்ற பெண் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் மூலம், காலை மணி 7.20-க்கு தமது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக, செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அஹமட் சுகார்னோ முஹமட் சஹாரி தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இனம் உறுதிப்படுத்தப்படாத, 50 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர், தலையில் பலத்த காயத்துடன் கிடந்ததைக் கண்டதாக அஹமட் சுகார்னோ கூறினார்.

அப்பெண்ணின் உடல் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பாதிக்கப்பட்டவரின் தலையின் வலது பக்கத்தில், காதுக்கு மேலே நான்கு சென்டிமீட்டர் அளவிலான காயமும், கண் இமைகளில் வீக்கமும் இருப்பது கண்டறியப்பட்டது.

அவரின் மரணத்தை கோலாலம்பூர் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக செந்தூல் பகுதியில் 46 வயதான வேலையில்லாத உள்ளூர் ஆடவர் ஒருவரையும் போலீசார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் தலையில் கட்டையைப் பயன்படுத்தி தாக்கியதாக நம்பப்படுகிறது.

இதனிடையே, விசாரணைக்கு உதவும் பொருட்டு, அவ்வாடவருக்கான தடுப்புக் காவல் விண்ணப்பம் இன்று செய்யப்பட்டதாக கூறிய அஹமட் சுகார்னோ, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)