Ad Banner
 பொது

அனுமதியின்றி கட்டப்படும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனை; இறுதி செய்யப்பட வேண்டும்

10/02/2026 05:59 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 10 (பெர்னாமா) -- அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படும் பிரச்சனை நிறுத்தப்படுவதோடு, இறுதி செய்யப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரிஸ் ஷா வலியுறுத்தினார்.

அவ்விவகாரம் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, சமூகத்தின் அமைதியும் ஒற்றுமையும் பாதிக்கப்படுவதால், அதனை உடனடியாக நிறுத்தும்படி சுல்தான் கேட்டுக் கொண்டதாக சிலாங்கூர் சுல்தானின் அந்தரங்கச் செயலாளர், டத்தோ முஹ்மட் முனிர் பானி தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலத்தைக் கட்டுவதற்கான ஒவ்வொரு விண்ணப்பத்தையும், மாநில அரசும் ஊராட்சித் துறையும், எப்போதும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ முஹ்மட் முனிர் நினைவூட்டினார்.

அதோடு, அரசு மற்றும் தனியார் நிலங்களில் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவதை தவிர்க்க அமலாக்கத் தரப்பினர் அணுக்கமாக கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும், அனைத்து சட்டங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு, அரசாங்கத்திடமிருந்தும் ஊராட்சித் துறையிடமிருந்தும் சட்டப்பூர்வ ஒப்புதலைப் பெற்று விண்ணப்பத்தின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும் என்றும் சுல்தான் ஷராஃபுடீன் வலியுறுத்தினார்.

இவ்வாண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரையில் சிலாங்கூர் மாநிலத்தில், 687 வழிபாட்டுத் தலங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)