Ad Banner
 பொது

ஈ.டி.எஸ்-க்கான கூடுதல் டிக்கெட்டுகள் நாளை முதல்  விற்பனை

10/02/2026 05:51 PM

 கோலாலம்பூர், பிப்ரவரி 10 (பெர்னாமா) -- மின்சார ரயில் சேவை ஈ.டி.எஸ்-இன் கேஎல் சென்ட்ரல் - ஜேபி சென்ட்ரல் மற்றும் கேஎல் சென்ட்ரல் வழித்தடத்திற்கான 12, 600 கூடுதல் பயண டிக்கெட்டுகள் நாளை பின்னிரவு தொடங்கி Keretapi Tanah Melayu நிறுவனம் KTMB விற்பனை செய்யும்.

பிப்ரவரி 13 முதல் 22-ஆம் தேதி வரைக்குமான,  ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 879 பயண டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகி விட்ட நிலையில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

ஏழாவது ETS3 ரயில் பெட்டி சேவையை இயக்குவதற்கான ஒப்புதல் அண்மையில் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கொள்ளளவு அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக லோக் கூறினார்.  

“கே.எல் சென்ட்ரல்-ஜோ.பி சென்ட்ரல்-கே.எல் சென்ட்ரல் வழித்தடங்களுக்கான கூடுதல் 12 ஆயிரத்து 600 டிக்கெட்டுகள் விற்பன செய்யப்படவுள்ளன என்பதை இங்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். பிப்ரவரி 13 முதல் 22-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கு நாளை பின்னிரவு 12.15 மணிக்கு விற்பனை செய்ய தொடங்கும். அண்மையில், ஏழாவது ETS3-இன் சேவையைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது,'' என்றார் அவர்.

இன்று மக்களவையில் சீனப்புத்தாண்டு மற்றும் நோன்பு பெருநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு ETS மற்றும் Ekspres Timuran சேவைகளுக்கான விற்பனை நிலையையும் கூடுதல் டிக்கெட்டுகளுக்காக KTMB மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினர் லீ சுவான் ஹாவ் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.   

சீனப் புத்தாண்டை முன்னிட்டு, இவ்வாண்டு 46 ஆயிரத்து 404 கூடுதல் டிக்கெட்டுகளை KTMB வழங்கியுள்ளது.

அதோடு, நோன்பு பெருநாளை முன்னிட்டு மார்ச் 13 முதல் 29-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கு வழங்கப்பட்ட 2 லட்சத்து 24 ஆயிரத்து 196 டிக்கெட்டுகளில், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 823 அல்லது 53 விழுக்காடு டிக்கெட்டுகள் விற்பனை செய்து விட்டதாக அந்தோணி லோக் விவரித்தார்.   

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)