ஷா ஆலம், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- வணிக உரிமங்களின் விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தலையும் விரைவுப்படுத்துவதற்குப் பதிலாக கையூட்டு பெற்ற வழக்கில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிலாங்கூர் ஊராட்சி துறையின் முன்னாள் அமலாக்க அதிகாரி ஒருவரையும், ஆறு அதிகாரிகளையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.
நேற்று காலை மணி 10 முதல் மதியம் மணி 12 வரை கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் 30 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் வணிக நிறுவன உரிமையாளர்களிடமிருந்து 500 ரிங்கிட் முதல் 15,000 ரிங்கிட் வரை பெற்றதாகவும், குறிப்பிட்ட நிறுவனங்களைச் சட்ட நடவடிக்கையிலிருந்து பாதுகாத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து 2023-ஆம் ஆண்டு வரையில் எழுவரும் அச்செயலில் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் சந்தேகிக்கப்படுகிறது.
அவர்கள் அனைவரும் இரு நிறுவன உரிமையாளர்களிடமிருந்து தங்களது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளின் வழியாக பணப் பரிமாற்றங்கள் மூலம் மாதத்திற்கு 500 ரிங்கிட் முதல் 15,000 ரிங்கிட் வரை கையூட்டுப் பெற்றதாக நம்பப்படுகிறது
இன்று காலை ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எஸ்.பி.ஆர்.ஏம் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் அமிரா மஸ்துரா காமிஸ் உத்தரவு பிறப்பித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]