Ad Banner
 பொது

நாளை தொடங்கி 3 மாநிலங்களில் மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

10/02/2026 05:45 PM

கோலா நெருஸ், பிப்ரவரி 10 (பெர்னாமா) -- நாளை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை, ஜோகூர், கெடா மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொடர்ந்து நிலவி வரும் வெப்பமான வானிலை காரணமாக சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள பல அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.

''அது எச்சரிக்கை நிலையை எட்டிவிட்டது. எங்களுக்கு வேண்டாம் அபாய கட்டத்தை அடைந்துவிட்ட பிறகு அதற்கான முயற்சியை மேற்கொள்வது,'' என்றார் அவர்.

இன்று, திரெங்கானு, கோலா நெருஸில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

ஜோகூரில், அப்பர் லாயாங், பூலாய் 1 மற்றும் மாசாப் ஆகிய அணைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் முறையே புதன், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார்.

இதனிடையே, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கெடாவில் உள்ள பெடு, மூடா மற்றும் ஹனிங் ஆகிய அணைகளிலும், பேராக்கில் உள்ள புக்கிட் மெரா அணையிலும் மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)