கோலாலம்பூர், பிப்ரவரி 10 (பெர்னாமா) -- நாட்டில் சுற்றுச்சூழல் சட்ட அமலாக்கத்தின் நிர்வாகம் மற்றும் செயல்திறனை வலுப்படுத்த இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்நடவடிக்கை, J-A-S எனப்படும் சுற்றுச்சூழல் துறையின் நிலையான செயல்பாட்டு தர விதிமுறைகள், செயல்திறன் மிக்கதாகவும் உயர்ந்த தாக்கம் கொண்டதாகவும் மேம்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர்தர் ஜோசப் குரூப் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் துறையின் தலைமை இயக்குநர் மற்றும் துணைத் தலைமை இயக்குநரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் கைது செய்ததை, அமைச்சு கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முழு உறுதிப்பாட்டை வழங்கியதாகவும் டத்தோ ஶ்ரீ ஆர்தர் கூறினார்.
"நேர்மை, நல்ல ஆட்சி மற்றும் பொறுப்பு ஆகிய கொள்கைகளை நாங்கள் கடைப்பிடிப்பது எங்களது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதை அமைச்சு வலியுறுத்த விரும்புகிறது. எந்தவொரு அதிகார துஷ்பிரயோகம் அல்லது ஊழல் நடைமுறைகள் சமரசம் செய்யப்படாது. மேலும், தேவைப்பட்டால் பொது அதிகாரி விதிமுறைகளின் படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.," என்றார் அவர்.
சுற்றுச்சூழல் துறையின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதன் நேர்மையை உறுதி செய்வதற்கான அமைச்சின் நடவடிக்கைகள் குறித்து பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹசிம் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஶ்ரீ ஆர்தர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)