கோலாலம்பூர், 09 பிப்ரவரி (பெர்னாமா) -- முக்கிய வளர்ச்சித் துறைகளில் இருவழி பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், அண்மைய மலேசியப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நிறுவனத்தின் தலைவர்களுடன் உயர்மட்ட அளவிலான தொடர் சந்திப்புகளை நடத்தினார்.
இச்சந்திப்பை, இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்ப புதிய பரிமாற்றத்தையும் முதலீட்டு வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதற்கான மலேசிய தொழில்துறை தலைவர்கள் உடனான ஓர் ஆக்கப்பூர்வமான தொடர்பு என்று இந்திய வெளியுறவு விவகார அமைச்சு, எம்.ஈ.ஏ தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
பெர்ஜாயா குழும நிறுவன தோற்றுநர் டான் ஶ்ரீ வின்சன்ட் டானுடன் மோடி சந்திப்பு நடத்தியதோடு, விருந்தோம்பல், உணவு சேவைகள், சில்லறை விற்பனை, நிதி தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புகளை இரு தரப்பினரும் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்திய விருந்தோம்பல் துறையில், பெர்ஜாயா வலுவான வருகையைக் கொண்டுள்ளதோடு, ஆற்றல்மிக்க இந்திய சந்தைகள் மற்றும் பயனீட்டாளர்கள் மத்தியில் பெர்ஜெயாவின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான தனது விருப்பத்தை டான் வெளிப்படுத்தியதாகவும் எம்.ஈ.ஏ குறிப்பிட்டுள்ளது.
மேலும், மோடி 'Phison Electronics' தோற்றுநர் டத்தோ புவா கெயின் செங், பெட்ரோனாஸ் குழும தலைவரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான டான் ஶ்ரீ தெங்கு முஹமட் தௌஃபிக், தேசிய கருவூல நிறுவன நிர்வாக இயக்குநர் டத்தோ அமிருல் ஃபெய்சால் வான் சாஹிர், ஆகியோரையும் சந்தித்தார்.
இப்பயணத்தின்போது, மோடி மலேசியத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியதோடு, வணிகப் பங்குதாரர்களுக்கு உரையும் நிகழ்த்தினார்.
அதோடு, வெளிநாட்டு முதலீட்டை கவர்வதற்கும் ஆசியான் பங்காளிகளுடன் விநியோகச் சங்கிலி மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)