ஈப்போ, 09 பிப்ரவரி (பெர்னாமா) -- நெடுஞ்சாலைகளில் உள்ள R&R ஓய்வு தள பகுதிகளுக்கு வெளியில் வசதிகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதன் வழியாக பிளஸ் மலேசியா நிறுவனம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வியூகத்தை செயல்படுத்துகிறது.
அடுத்த வாரத்தில் கொண்டாடவிருக்கும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் ரமலான் மாத தொடக்கத்தை முன்னிட்டு, 22 லட்சம் வாகனங்கள் அதன் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
பிரதான நெடுஞ்சாலை ஓய்வுப் பகுதிகளில் அதிகப்படியான நெரிசலைத் தவிர்க்க, முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட டோல் சாவடிகளைச் சுற்றியுள்ள லே பை எனப்படும் சாலையோர வாகன ஓய்விடத்தைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளும் அந்நடவடிக்கையில் அடங்கும் என்று பிளஸ் செயல்பாட்டுப் பிரிவின் மூத்த பொது நிர்வாகி, முஹமட் யூசோப் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
அதோடு, நெடுஞ்சாலையில் உள்ள டோல் சாவடிக்குப் பின்னர் உள்ள ஒவ்வொரு சாலை சந்திப்பிலும், பயனர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
''டோல் சாவடிக்குப் பின்னர் ஒவ்வொரு சாலை சந்திப்பிலும், அடிப்படை வசதிகள் மற்றும் கிட்டத்தட்ட அதே கழிப்பறைகளைக் கொண்ட சாலையோர வாகன ஓய்விட உள்ளது. ஒரு சூராவ் உள்ளது. வாகன நிறுத்துமிடம் உள்ளது. மக்கள் பொருட்களை விற்கும் ஒரு பகுதியும் உள்ளது. மேலும் இங்கே விற்பனை இயந்திரமும் உள்ளது. நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்தை கலைக்க அதனைப் பயன்படுத்தலாம்,'' என்றார் அவர்.
இன்று, பிளஸ் நெடுஞ்சாலையின் மத்திய மண்டலத்திற்கு, ஊடகவியலாளர்களுடன் பயணம் மேற்கொண்டபோது, முஹமட் யூசோப் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)