கோலாலம்பூர், 09 பிப்ரவரி (பெர்னாமா) -- அனுமதியின்றி கட்டப்படும் வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் அதனை எதிர்ப்பதற்காக சட்டவிரோத வழிப்பாட்டுத் தலங்களுக்கு எதிரான அமைப்பான GARAH மேற்கொண்டுள்ள எதிர்ப்பு பேரணியும், தேசிய ஒற்றுமையின் அடிப்படையில் விவேகமுடன் கையாளப்பட வேண்டும்.
நாட்டின் மதம் மற்றும் இனங்களுக்கு ஒற்றுமையைத் தொடர்ந்து பேண இந்நடவடிக்கை அவசியம் என தேசிய ஒற்றுமை அமைச்சு தெரிவித்துள்ளது.
வழிபாட்டு தலங்கள் தொடர்பான அனைத்து விவகாரங்களும் சட்டம் மற்றும் ஊராட்சி அதிகாரிகளின் அதிகார வரம்பிற்கு ஏற்ப தீர்க்கப்பட வேண்டும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் கூறினார்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வுக் காணும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமே தவிர,
சமூகத்தின் நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு அவசர நடவடிக்கைகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்று, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஏரன் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தேசிய ஒருமைப்பாடு என்பது நாட்டின் மதிப்புமிக்க சொத்து என்பதால் அதை உணர்ச்சிகள், தவறான புரிதல்கள் அல்லது பொறுப்பற்ற கருத்துகள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து சீர்குலைக்கூடாது என்று அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்.
இதனிடையே, மலேசியர்களிடையே வெறுப்பு அல்லது பிரிவினையைத் தூண்டும் தளமாக பொது இடங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதோடு, நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் மடானி அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளதை டத்தோ ஏரன் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)