புத்ராஜெயா, பிப்ரவரி 08 (பெர்னாமா) -- டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று புத்ராஜெயாவில் உள்ள ஶ்ரீ பெர்டானா வளாகத்தில், நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்தினார்.
இன்று காலை மணி 9.35 அளவில், ஶ்ரீ பெர்டானா வளாகத்திற்கு வருகை புரிந்த மோடியைப், அன்வார் வரவேற்றார்.
இந்த வருகையின்போது மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளின் விரிவான வியூக பரிமாற்றத்தை வலுப்படுத்துவதில் முக்கியக் கவனம் செலுத்தப்பட்டது.
இரு தரப்புக்கும் நன்மை அளிக்கக்கூடிய, வர்த்தகம், முதலீடு, தற்காப்பு மற்றும் பாதுகாப்பு, மனிதவளம், சுற்றுலா, தொடர்பு, விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை உட்படுத்தியும், வட்டார மற்றும் அனைத்துலக பிரச்சனைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
மேலும், முக்கியத் துறைகளில் இருவழி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாடாக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
ஊழல் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், கடற்படையினருக்கான பயிற்சித் தரநிலைகள், சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு, பேரிடர் நிர்வகிப்பு, ஆகியவற்றை அந்த ஒப்பந்தம் உள்ளடக்கி இருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)