ஜார்ஜ்டவுன், ஜனவரி 29 (பெர்னாமா) -- தைப்பூசத்தின்போது முருகனுக்கு காணிக்கை செலுத்தும் வகையில் ஆலயங்களிலும், குறிப்பாக இரத ஊர்வலத்தின் போது தேங்காய்கள் உடைக்கப்படுவது வழக்கம்.
எனினும், தற்போது சந்தைகளில் தேங்காய்களின் விலை அதிகரிக்கவும், அவற்றின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதால், குறைந்த எண்ணிக்கையிலான தேங்காய்களை உடைக்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கமும், மாநில மலேசிய இந்து சங்க பேரவையும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
தைப்பூச வழிபாட்டிற்கு தேங்காய் அத்தியாவசியம் என்றாலும் அவற்றை தேவையான அளவு மட்டும் பயன்படுத்தும்படி, ஒவ்வோர் ஆண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்தி வருகின்றது.
தேங்காய்களை உடைப்பதற்காக பயன்படுத்தும் பணத்தை பொருளாதார ரீதியில் சிரமத்தை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு அல்லது ஆதரவற்ற இல்லங்களுக்கு வழங்கும்படி பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வு & கல்வி பிரிவு அதிகாரி என்.வி சுப்பாராவ் ஆலோசனை வழங்கினார்.
''இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகள் பலவற்றை நாம் உட்கொள்ளலாம். ஆனால், உடைக்கப்படும் தேங்காய்கள் குப்பைத் தொட்டியில்தான் போடப்படுகின்றன. ஆகவே, குறைந்த அளவில் தேங்காயை உடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்,'' என்றார் அவர்.
இதனிடையே, தேய்ங்காய்கள் பற்றாக்குறையாக இருப்பதை விற்பனையாளர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
எனவே, தற்போதைய பொருளாதார சூழலில் பொது மக்கள் இதனை கருத்தில் கொண்டு வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுப்பாராவ் அறிவுறுத்தினார்.
மற்றொரு நிலவரத்தில், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் , தீவு மாநகர் மன்றம், மற்றும் மாநில மலேசிய இந்து சங்க பேரவை ஆகியவை இணைந்து 'வேண்டாம்' என்றக் கரும்பொளில் பசுமை தைப்பூசம் எனும் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருக்கின்றன.
உணவு விரையத்தை குறைப்பது, குப்பை கொட்டுவதைத் தவிர்ப்பது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிகளை பயன்படுத்துவது ஆகியவையே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும் என்று சுப்பாராவ் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)