Ad Banner
 பொது

'கேப்டன் பிரபா' கும்பலைச் சேர்ந்த மூவர் சிப்பாங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்

28/01/2026 08:05 PM

சிப்பாங், ஜனவரி 28 (பெர்னாமா) -- 'கேங் கேப்டன் பிரபா' என்று அழைக்கப்படும் திட்டமிடப்பட்ட குற்றவியல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்த குற்றத்திற்காக மூன்று ஆடவர்கள் இன்று சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இன்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் கே.எல்.ஐ.ஏ வந்தடைந்தபோது 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம் SOSMAவின் கீழ் ச. நவீந்திரன் ராஜ், ச.ஶ்ரீதரன், மற்றும் ச. பிரதீப்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் நீதிபதி அஹ்மட் ஃபுட் ஒத்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்டபோது அம்மூவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி வரையில் கோலா லங்காட், ஜெஞ்சரோமில் அம்மூவரும் 'கேங் கேப்டன் பிரபா'வில் உறுப்பினராக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 130V (1)ரின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

ஜாமின் வழங்காத நீதிமன்றம் இவ்வழக்கின் மறுசெவிமடுப்பிற்காக ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)