ஜாலான் பார்லிமன், ஜனவரி 28 (பெர்னாமா) -- அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு அதிகரித்ததன் வழி ஸ்பூமி எனப்படும் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.
இதற்கு முன்னர் இருந்த மூன்று கோடி ரிங்கிட்டைக் காட்டிலும் ஸ்பூமி ஒதுக்கீடு ஐந்து கோடி ரிங்கிட்டாக ஒதுக்கப்பட்டிருப்பதைத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.
ஸ்பூமி நிதி அதிகரிக்கப்பட்டிருப்பது இந்திய சமூகத்தில் தொழில்முனைவோரின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு உதவும் என்று ஸ்டீவன் சிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
''ஜனவரி மாத இறுதிக்குள் ஸ்பூமி 136 இந்திய தொழில்முனைவோருக்கு குறைந்தது 41 லட்சம் ரிங்கிட்டை விநியோகித்துள்ளது'', என்றார் ஸ்டீவன் சிம் சீ கியோங்.
இன்று நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே பிப்ரவரி முதலாம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 2026ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு KUSKOP MADANI திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உதவுவதற்காகப் பினாங்கு, ஜார்ஜ்டவுனில் 200 Wira KUSKOP தன்னார்வலர்களைத் தங்கள் தரப்பு அங்கு பணிக்கு அமர்த்தவிருப்பதாகச் சிம் குறிப்பிட்டார்.
இக்கொண்டாட்டம் முழுவதிலும், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக 17 முதல் 30 வயது வரையிலான பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளைஞர்களைக் கொண்ட தன்னார்வக்குழு அங்கு பணியில் ஈடுபடவிருப்பதாக அவர் விவரித்தார்.
மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு, பினாங்கு, ஜார்ஜ்டவுனில் இலவச ஓய்வெடுக்கும் இட வசதியை தமது அமைச்சு ஏற்படுத்தவிருப்பதையும் சிம் சுட்டிக்காட்டினார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமேஸ்வரன், கடனுதவிகள் பெறுவது, ஆவணங்களைச் சமர்பிப்பது போன்ற தகவல்களை வழங்குவதற்கு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு பினாங்கு தைப்பூசத்தில் முகப்பு ஒன்றை அமைக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
தைப்பூசத்திற்கு வருகை புரியும் பக்தர்கள் அல்லது பொது மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
''தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சில் இருந்து அனைத்து நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். தெக்குன் உட்பட பல நிறுவனங்கள். எனவே, மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடனுதவிகள் பெறுவது, ஆவணங்களைச் சமர்பிப்பது குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த கூடாரத்திற்குச் செல்லலாம். இந்தக் கூடாரத்தில் நிறுவனங்கள் மட்டுமல்லாது, உணவுகள் அனைத்து வழங்கப்படுகிறது. ஓய்வெடுக்க இடம் தருகிறார்கள்,'' என்றார் அவர்.
இதனிடையே, முன்னதாக இருந்த மூன்று கோடி ரிங்கிட்டைக் காட்டிலும், SPUMI ஒதுக்கீடு ஐந்து கோடி ரிங்கிட்டாக ஒதுக்கப்பட்டிருப்பதை பிரபாகரன் வரவேற்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)