பினாங்கு, ஜனவரி 27 (பெர்னாமா) -- பினாங்கில் தைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளி இரத ஊர்வலகத்திற்குச் செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ கண்காணிப்பு செயல்முறையைப் பினாங்கு நாட்டுக் கோட்டை செட்டியார் கோயில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊர்வலத்தின் போது வெள்ளி ரதம் இருப்பிடம் நேரம் குறித்த தகவல்கள் அனைத்தும் அச்செயல்முறையின் வழி பக்தர்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று நாட்டுக் கோட்டை செட்டியார் கோயில் அறங்காவலர் பி.ஆர்.சி வீரப்பன் தெரிவித்திருக்கின்றார்.
இச்செயல்முறை ஏ.ஐயுடன் மேம்படுத்தப்பட்டு கடந்த ஈராண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி மிகவும் துல்லியமான நேர கணிப்புகளுக்காக அளவீடு செய்யப்படுவதாகப் பி.ஆர்.சி வீரப்பன் கூறினார்.
1894ஆம் ஆண்டு இந்தியா, தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த வெள்ளி ரதம் கப்பல் மூலம் அன்று பினாங்கு மாநிலத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அன்று தொடங்கி அந்த ரதம் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் சேதமடைந்த பகுதிகளை மட்டும் மாற்றியமைத்து புதிய பொலிவுடன் அதனை ஆலய தரப்பு மெருகேற்றி வைத்திருக்கின்றது.
வேலவனின் ஊர்வலத்தில் கம்பீரமாகக் காட்சியளிப்பதற்காக இந்த வெள்ளி ரதம் சுத்தம் செய்யப்பட்டு தயார்நிலை பணிகளின் இறுதி கட்டத்தில் உள்ளதாக வீரப்பன் தெரிவித்திருக்கின்றார்.
வரும் ஜனவரி 31ஆம் தேதி லேபூஹ் பினாங்கில் உள்ள நகரத்தார் கோவில் வீடு ஆலயத்திலிருந்து காலை மணி 5.30 அளவில் புறப்படும் வெள்ளி ரதம், ஜுலியா ஸ்ட்ரீட், விக்டோரியா ஸ்ட்ரீட், மாஸ்வ்ல் ரோட், ஜாலான் டத்தோ கேரமட், வெஸ்டர்ன் ரோட் வழியாக ஊர்வலமாகச் சென்று நாட்டுக் கோட்டை செட்டியார் கோயிலை வந்தடையும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)