கோலாலம்பூர், ஜனவரி 27 (பெர்னாமா) -- நேர்மறையான பொருளாதார குறியீடுகள் ரிங்கிட்டின் நிலை மற்றும் மதிப்பை வெற்றிகரமாக வலுப்படுத்தியுள்ளன.
ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்திருப்பது நாட்டின் பொருளாதாரத்தில் முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் புலப்படுத்துவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''ரிங்கிட்டைத் தனியாகப் பார்க்கக் கூடாது. அதிகரித்த முதலீடு, அதிகரித்த வருமானம் மற்றும் குறைந்த வேலையின்மை ஆகிய கோணங்களிலும் அதைப் பார்க்க வேண்டும். பொருளாதார குறியீடுகள் நேர்மறையான அறிகுறிகளைக் காட்டுகின்றன. மேலும், இது ரிங்கிட்டின் நிலை மற்றும் வலிமையை வெற்றிகரமாக வலுப்படுத்தியுள்ளது.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்திருப்பது நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போக்கைப் பாதிக்காது.
மாறாக அரசாங்கம் தொடர்ந்து பொருளாதாரத்தை வலுப்படுத்தி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என்று நிதி அமைச்சருமான அன்வார் கூறினார்.
இதனிடையே, 2025 ஆம் ஆண்டில் பிரதமர் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் மற்றும் வர்த்தக இலக்கின் மூலம் 454 கோடி ரிங்கிட் மதிப்பிலான ஏற்றுமதி விற்பனையை மலேசியா பதிவுச் செய்துள்ளது.
இயற்கை எரிவாயு, செம்பணை எண்ணெய், மின்சார மற்றும் மின்னணு பொருட்கள் உட்படுத்திய துறைகள் இந்த விற்பனை ஏற்றுமதியில் அடங்கும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்
''இங்கிலந்து, தாய்லாந்து, ரஷ்யா, இத்தாலி , பிரான்ஸ், பிரேசில், தென்கொரிய, எத்தியோப்பியா, கென்யா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுடனான இந்த உறவின் மூலம் மலேசியா RM45.4 பில்லியன் ஏற்றுமதி விற்பனையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக மின்னியல் உபரிப்பாக, விண்வெளித் துறை சார்ந்த பொருட்கள், தளவாடங்கள் மற்றும் பிற பொருட்களின் தேவை அதிகரித்து வருவதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
கடந்த ஆண்டுக்கான வர்த்தக செயல்திறன் மற்றும் அந்த காலகட்டத்தில் பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் மற்றும் மலேசியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு தொடர்பில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் எழுப்பிய கேள்விக்குப் அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)