கோலாலம்பூர், ஜனவரி 7 (பெர்னாமா) -- மலேசியத் தரைப்படை வீரர்கள் கடமையில் ஈடுபடும்போது எப்போதும் நேர்மை மற்றும் நம்பிக்கையைப் பேணுவதை உறுதி செய்யுமாறு புதிய தரைப்படை தளபதி ஜெனரல் டத்தோ அசான் முஹமட் ஒத்மான்-க்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
நாட்டின் தற்காப்புப் படைகளின் வலிமை மற்றும் நம்பகத்தன்மைக்கு ஊழல் முக்கிய எதிரி என்றும் எந்தவோர் அதிகார மீறலோ அல்லது முறைகேடோ முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சுல்தான் இப்ராஹிம் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நேர்மையான தலைமைத்துவ கலாச்சாரம் மிக உயர்ந்த அளவில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறிய மாமன்னர் இராணுவத் தளபதி சுத்தமான வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை கடைப்பிடிப்பதில் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார்.
நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதில் நெறிமுறையற்ற நடைமுறைகளிலிருந்து விடுபட்ட ஒரு தொழில்முறை குழுவாக இராணுவம் மக்களால் தொடர்ந்து மதிக்கப்படுவதோடு நம்பப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
31-ஆவது தரைப்படை தளபதியாக ஜெனரல் டத்தோ அசான் முஹமட் ஒத்மான்-னின் நியமனம் இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதியில் இருந்து அமலில் உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)