நியூ ஜெர்சி, 24 ஜனவரி (பெர்னாமா) -- ஆபத்தான மற்றும் வழக்கத்திற்கு மாறான கடுமையான குளிர்கால புயலுக்கு தயாராகி வருவதால், நியூ ஜெர்சி ஆளுநர் மிகி ஷெரில் அம்மாநிலத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கும் அவசரகால நிலையை அறிவித்தார்.
கடுமையான மற்றும் பரவலான பனிப்பொழிவு, உறைபனி மற்றும் மணிக்கு 30 மைல் வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரித்த அவர், சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பயணத்தைத் தவிர்க்குமாறு மக்களுக்கு வலியுறுத்தினார்.
பாதுகாப்பு நடவடிக்கையாக, மாநிலங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலைகளில் வணிக வாகனக் கட்டுப்பாடுகளை ஷெரில் அறிவித்தார்.
இந்தப் புயல் தெற்கு ஜெர்சியில் 8 முதல் 12 அங்குலமும், வட ஜெர்சியில் 12 முதல் 18 அங்குலமும் பனிப்பொழிவைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வடமேற்கில் அதிகபட்சமாக பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
சனிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை பிற்பகல் வரை பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் குளிர் காலநிலை எச்சரிக்கை அமலில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்தப் புயல் வழக்கத்திற்கு மாறாகவும், கடந்த 10 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கும் இருக்கும் என்று ஷெரில் எச்சரித்தார்.
மிக மோசமான குளிர்கால புயல் அமெரிக்கா முழுவதும் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கிய நிலையில், நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் கொடிய குளிரையும், மின்சாரத் தடைகளையும், பனிக்கட்டி சாலைகளையும் எதிர்கொண்டதோடு பல மாநிலங்களின் ஆளுநர்கள் அவசரகால நிலையை அறிவிக்ககும் சூழ்நிலை ஏற்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]