பெர்மாத்தாங் பாசிர், ஜனவரி 24 (பெர்னாமா) -- ஆசியாவிலேயே சிறந்த செயல்திறன் கொண்ட நாணயங்களில் ஒன்றாக தற்போது ரிங்கிட் உள்ளது.
நாட்டின் நல்லாட்சி கொள்கைகள், அரசியல் நிலைத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்கால திசையில் முதலீட்டாளர்களுக்கு உள்ள நம்பிக்கையை அது நிரூபித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, நாட்டின் அமைதி, திறமையான நிர்வாகம், ஊழல் மற்றும் முறைகேடுகளை எதிர்ப்பதில் அரசாங்கத்தின் கடுமையான தொடர் முயற்சிகளின் விளைவாகவும் ரிங்கிட் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''தாமதமாக இருந்தால், மக்கள் நம்மை திட்டுகின்றனர். அதனால் தான், மாநில அரசு திறமையாக இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நாம் ஒரு திட்டத்தைச் செய்ய விரும்பும்போது, ஒரு மருத்துவமனை கட்ட விரும்பினால், அதற்கு ஒரு தரகு தொகை இருக்க வேண்டும். மருந்து வாங்க விரும்பினால், அதற்கு ஒரு தரகு தொகை கேட்டால், நாடு முன்னேறாது. அதனால்தான் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலுக்கு எதிராக நாம் ஏன் இவ்வளவு வலுவாக இருக்கிறோம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார் அவர்.
இன்று, பெர்மாத்தாங் பாசிரில், மடானி கலாச்சார விழா மற்றும் 2026 பினாங்கு மக்கள் விருந்து நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தபோது டத்தோ ஶ்ரீ அன்வார் உரையாற்றினார்.
நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் முக்கியமான 4.00 என்ற உளவியல் எல்லையைக் கடந்து, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலான காலக்கட்டத்தில் இல்லாத அதிகபட்ச அளவான 3.9992-ஐ எட்டியது.
ஆகக் கடைசியாக, 2018-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி, ரிங்கிட் அந்த அளவில் இருந்தது, அப்போது அது 3.9960/9990-ஐ எட்டியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)