பட்டர்வெர்த், ஜனவரி 24 (பெர்னாமா) -- ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோய் விகிதத்தைக் கொண்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதால், சீனியை உணவில் சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளும்படி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
அதிகரித்து வரும் பொது சுகாதாரப் பிரச்சனைகளுக்கு ஆரோக்கியமற்ற உணவு முறை முக்கிய காரணமாவதோடு நாட்டின் மருத்துவ துறைக்கு அழுத்தம் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
''அதிகப்படியான சீனி. ஆசியாவிலேயே சீனியின் பயன்பாடு அதிகம் உள்ள நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். மலேசியாவில் மருத்துவத்திற்கு கோடி கணக்கில் செலவழிப்பது காரணமாக இருக்கலாம். பின்னர், மக்கள் நோய்க்கு ஆளாகிறார்கள்,'' என்றார் அவர்.
இன்று சனிக்கிழமை, பிறை, செபெராங் பிறை மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் உரையாற்றியபோது டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அரசாங்கம் அதிகமாக செலவிட்டாலும், மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகாமல் இருக்க ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மருத்துவமனைகளிலும் அரசாங்க வளாகங்களிலும், ஆரோக்கியமான உணவு மற்றும் பானங்களை வழங்குவது உட்பட, சீனியைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)