கோலாலம்பூர், 23 ஜனவரி (பெர்னாமா) -- அரச மலேசிய கடற்படையின் எல்.சி.எஸ் எனப்படும் கடலோர போர்க் கப்பல் கட்டுமானத் திட்டத்தின் அண்மைய நிலவரங்களை மதிப்பிடும் பொருட்டு, இத்திட்டம் குறித்த முந்தைய வழக்கு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வரும் ஜனவரி 30-ஆம் தேதி தேசிய பொதுக் கணக்குச் செயற்குழு, பிஏசி லூமுட்டுக்கு வருகை மேற்கொள்ளவிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, அதில் பெறப்படும் தகவல்கள், பின்னர் நிர்ணயிக்கப்படும் விசாரணையின் போது தாக்கல் செய்யப்படும் என்று பிஏசி தலைவர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் தெரிவித்தார்.
''காகிதத்தில் அது முறையாக இருக்கலாம். நாம் பெறும் அறிக்கை முறையாக இருக்கலாம். ஆனால் நாம் களத்தில் இறங்கும்போது தான், என்ன தகவல்கள் கிடைக்கும் என்பதை பார்க்க முடியும். அதை அடுத்த விசாரணையில் கொண்டு வருவோம். அதன் தேதியை பின்னர் தீர்மானிப்போம்,'' என்றார் அவர்.
தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட வருகையைத் தொடர்ந்து, இது மூன்றாவது முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருகை என்றும் மாஸ் எர்மியாத்தி கூறினார்.
நாடாளுமன்ற பிஏசி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)