Ad Banner
 பொது

தம்மீதான நான்கு குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார் முன்னாள் இராணுவப்படை தளபதி

23/01/2026 03:59 PM

கோலாலம்பூர், 23 ஜனவரி (பெர்னாமா) -- தமது பதவியைப் பயன்படுத்தி 7 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் பணத்தை பெற்றது மற்றும், 30 லட்சம் ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்ததாக, முன்னாள் இராணுவப்படை தளபதி டான் ஶ்ரீ முஹமட் நிசாம் ஜஃபார் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும், நீதிபதி ரொஸ்லி அஹ்மாட் முன்னிலையில் அந்த நான்கு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டப் பின்னர், அவர் அதனை மறுத்து விசாரணைக் கோரினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் சிலருடன், முஹமட் நிசாம் இன்று காலை மணி 8.19-க்கு கோலாலம்பூர் நீதிமன்றத்தை வந்தடைந்தார்.

முதலாவது மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டின்படி, உறுப்பினர் சேவைக்கான உதவி தலைமைப் பணியாளர், ஏ.கே.எஸ்.பி.ஏ எனும் பதவியைப் பயன்படுத்தி, 2025 நோன்புப் பெருநாள் பொருட்களை வழங்குவதற்காக பல நிறுவனங்களை நியமித்ததன் மூலம் இரண்டு லட்சத்து 67,000 ரிங்கிட்டுக்கு மேல் மற்றும் இரண்டு லட்சத்து 85,000 ரிங்கிட்டை கையூட்டாக பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு எஸ்.பி,ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 23(1)-இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கையூட்டு பெற்ற தொகையில் ஐந்து மடங்கிற்கு குறையாமல் அபராதமும் விதிக்கப்படலாம்.

அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 409-இன் கீழ், அனுமதி இல்லாத கூடுதல் முதலீட்டு நோக்கத்திற்காக 30 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய இராணுவப்படை நல நிதி, டி.கே.ஏ.டி-ஐ உட்படுத்தி நம்பிக்கை மோசடி செய்ததாக முஹமட் நிசாம் மீது மூன்றாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும், குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 165-இன் கீழ், 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதிபலனின்றி, ஒரு நிறுவன இயக்குநரிடமிருந்து இரண்டு லட்சம் ரிங்கிட்டை பெற்றதாக அவர் மீது நான்காவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு நிறைவடையும் வரை, நீதிமன்றத்தில் கடப்பிதழை ஒப்படைப்பதோடு, சாட்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்ற கூடுதல் நிபந்தனையுடன், அந்த நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகையுடன் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் முஹமட் நிசாமை விடுவிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மார்ச் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)