Ad Banner
 உலகம்

பளு தூக்கும் இயந்திர விபத்து; கட்டுமான நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

16/01/2026 02:42 PM

தாய்லாந்து, ஜனவரி 16 (பெர்னாமா) -- வடகிழக்கு தாய்லாந்தில் கிரேன் எனப்படும் பளு தூக்கும் இயந்திரம் பயணிகள் இரயில் மீது விழுந்து விபத்துக்குள்ளான இரு சம்பவங்களைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் குத்தகையை ரத்துச் செய்யும்படியும் அதற்கு எதிரான தகுந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்படியும் போக்குவரத்து அமைச்சிற்கு தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுல் உத்தரவிட்டுள்ளார்.

பொது நலன்களைப் பாதுகாப்பதோடு பாதுகாப்பை உறுதி செய்யவும் நாட்டின் மீதான அனைத்துலக நம்பிக்கையை வலுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது உட்பட தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்று திடீர் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் அனுதின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று உயர்மட்ட நெடுஞ்சாலை கட்டுமானத் தளம் ஒன்றில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

பேங்காக் மற்றும் சமுத் சகோன் மாகாணத்தை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில் பளு தூக்கும் இயந்திர கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இருவர் கொல்லப்பட்ட வேளையில் இருவர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்திற்கு முன்னர் நேற்று முன் தினம் நக்கோன் ராட்சசிமா-இல் பளு தூக்கும் இயந்திரம் ஒன்று பயணிகள் இரயில் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 32 பலியான வேளையில் 66 பேர் காயமடைந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)