Ad Banner
 உலகம்

வங்காளதேசப் பொதுத் தேர்தல்: மலேசியாவில் அஞ்சல் வாக்குகளுக்குப் பதிவு

11/01/2026 06:05 PM

கோலாலம்பூர், ஜனவரி 11 (பெர்னாமா) -- எதிர்வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ள வங்காளதேசத்தின் 13வது பொதுத் தேர்தலுக்கு மலேசியாவில் வசிக்கும் சுமார் 85 ஆயிரம் வங்காளதேச குடிமக்கள் அஞ்சல் வாக்குகளுக்குப் பதிவு செய்துள்ளனர்.

வங்காளதேசத்தின் தேர்தலுக்காக அஞ்சல் வாக்களிப்பு அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 

Postal Vote BD எனும் செயலி வழி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் வீடுகள் மற்றும் பணியிடங்களுக்கு வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மலேசியாவுக்கான வங்காளதேச உயர் ஆணையர் மஞ்சுருல் கரீம் கான் சௌத்ரி தெரிவித்தார்.

''எங்களுக்கு அந்த எண்ணிக்கை கிடைத்தது. இங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களில் சுமார் 85,000 பேர் அதாவது 9இல் இருந்து 10 விழுக்காட்டினர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள். செயலி மற்றும் நேரடி அஞ்சல் வாக்குச்சீட்டு. வாக்குச்சீட்டு வந்துவிட்டது. எனக்கு என்னுடைய வாக்குச்சீட்டு கிடைத்துவிட்டது'', என்றார் மஞ்சுருல் கரீம் கான் சௌத்ரி.

ஜனவரி 22ஆம் தேதி தொடங்கி அஞ்சல் வாக்காளர்கள் வாக்குச் செலுத்த தொடங்கலாம்.

அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்களையும் வங்காளதேச தேர்தல் ஆணையம் சரிபார்க்கும் என்றும் ஜனவரி 26ஆம் தேதிக்குள் வாக்களிக்கும் செயல்முறை நிறைவுசெய்யப்பட வேண்டும் என்றும் அவர் சௌத்ரி தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு 12 கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)