கினாபாத்தாஙான், ஜனவரி 10 (பெர்னாமா) -- ஜனவரி 24 நடைபெறும் லாமாக் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியும் சபா வாரிசான் கட்சியும் நேரடி போட்டியை சந்திக்கவுள்ளன.
இதில், தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து 17வது சபா மாநிலத் தேர்தலில் லாமாக் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சுயேட்சை வேட்பாளரான முஹமட் இஸ்மாயில் ஆயோப் போட்டியிடுகிறார்.
அதே வேளையில், வாரிசான் கட்சி 15வது பொதுத் தேர்தலின்போது, கினாபாதாஙான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மஸ்லிவாத்தி அப்துல் மாலிக்கை களமிறக்குகிறது.
இன்று காலை 10 மணிக்கு, ஶ்ரீ லாமாக் மண்டபத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும், இருவரும் போட்டியிட தகுதியுடையவர்கள் என்று தேர்தல் நிர்வாக அதிகாரி டாக்டர் எடி ஷைசுல் ரிசாம் அப்துல்லா அறிவித்தார்.
"நான் வேட்புமனுக்களை சரிபார்த்தேன். அவற்றை சரிபார்த்தப் பிறகு, எந்த வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை என்பதை முடிவு செய்வதில் நான் திருப்தி அடைகிறேன். எந்த வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை," என்றார் அவர்.
முஹமட் இஸ்மாயில் ஆயோப், காலை மணி 9:04க்கும் அவரைத் தொடர்ந்து, மஸ்லிவாத்தி அப்துல் மாலிக் காலை மணி 9:07க்கும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செயல்முறை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் சுமூகமாக நடைபெற்றது.
வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஜனவரி 23ஆம் தேதி இரவு மணி 11.59 வரை 14 நாள்கள் பிரச்சாரக் காலத்தை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
கினாபாதாஙான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்றத்திற்கான தேர்தலில் வாக்களிக்க 48,722 பதிவுபெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)