கோலாலம்பூர், ஜனவரி 02 (பெர்னாமா) -- புத்தாடை, புதிய வாகனம், அசையா சொத்துகள் ஆகியவற்றை வாங்கிச் சேர்ப்பதும் புது வியாபாரத்தில் அடியெடுத்து வைப்பதுமே புத்தாண்டின் புதிய சிந்தனை என்று பலரும் நினைத்து வருகின்றனர்.
அது தவறில்லை என்றாலும், இதுவரையில் அடைய முடியாத அல்லது தொட முடியாத உயரத்தை எட்டுவதும் தீய பழக்க வழக்கங்களையும் குணங்களையும் விட்டுவிட நினைப்பதுமே, உண்மையான புதிய சிந்தனை என்று தன்முனைப்புப் பேச்சாளர் எஸ். சத்திய சீலன் தெரிவித்தார்.
"புதிய சிந்தனை என்பது என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் அது வளர்க்க வேண்டும். அதுவே அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். ஆக எந்த சிந்தனை இவை அனைத்தையும் முழுமையாக உருவாக்குகிறதோ அதுவே புதிய சிந்தனையாக கருதப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
மொத்தத்தில் சிந்தனைப் புரட்சியே, புதிய சிந்தனைக்கான உத்வேகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
புத்தாண்டைத் தொடங்கும் வேளையில், எதிர்காலத்தை முன்னிறுத்தி பல்வேறு புதிய திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டினை நினைவுகளையும் அது நமக்குக் கற்றுத் தந்த பாடத்தையும் தவறாமல் மீள்பார்வை செய்ய வேண்டும் என்றும் சத்திய சீலன் கேட்டுக் கொண்டார்.
"கடந்த வந்த பாதையை ஒருபோதும் மறக்கவே கூடாது. காரணம் அது சிறந்த படிப்பினையாக இருக்கக்கூடும். தோல்வியாக இருந்தால் அது ஒரு படிப்பினையையும் வெற்றியாக இருந்தால் அது ஓர் உந்துதல் சக்தியையும் அளிக்கும். எனவே கடந்த காலத்தின் எந்த அனுபவமும் யாருக்கும் எந்த வகையிலும் வீணளிக்காது," என்றார் அவர்.
மேலும், எந்தச் செயலாக இருந்தாலும் நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப்போடாமல், அதை அன்றைய தினத்திலே செய்து முடிக்கும் பழக்கத்தை மலேசியர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
மேலும், நமது வாயிலிருந்து உச்சரிக்கப்படும் ஒவ்வொரு சொல்லும் மற்றவரின் முன்னேற்றத்திற்கான தளமாக இருக்க வேண்டும்.
எனவே, ஆண்டுத் தொடக்கத்தில் புதிய சிந்தனைகள், புதிய தீர்மானங்கள் என்று பட்டியலிட்டால் மட்டும் போதாது.
மாறாக, ஆண்டு இறுதிவரை அத்தீர்மானங்களை கண்ணியத்தோடும் மன உறுதியோடும் காத்து பின்பற்ற வேண்டும் என்று பெர்னாமாவில் பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் சத்திய சீலன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)