சிலாங்கூர், டிசம்பர் 23 (பெர்னாமா) -- ஈராண்டுகளுக்கு முன்னர் மதி இறுக்க குறைபாடுடைய தமது ஆறு வயது மகன் சேன் ராயன் அப்துல் மதின்-க்கு காயங்கள் ஏற்படும் அளவிற்கு அவனைப் புறக்கணித்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறை தண்டனையை ஒத்திவைக்கும்படி இஸ்மானிரா அப்துல் மனாஃப் செய்த விண்ணப்பத்தை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இவ்வழக்கின் மேல்முறையீட்டுச் செயல்முறை நிலுவையில் உள்ளதால் விதிக்கப்பட்ட தண்டனையை ஒத்திவைப்பதற்கான சிறப்பு சூழல் எதுவுமில்லை என்பதைக் கண்டறிந்த பின்னர் நீதிபதி டத்தோ அஸ்லம் சைனுதீன் அம்முடிவை எடுத்தார்.
விண்ணப்பதாரர் மற்றும் பிரதிவாதியின் பிரமாணப் பத்திரங்கள் இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வ மற்றும் வாய்மொழி வாதங்கள் பரிசீலிக்கப்பட்டு செவிமடுத்த பின்னரே அத்தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவைப்பதற்கான விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய டத்தோ அஸ்லம் முடிவு செய்தார்.
கடந்த நவம்பர் 19-ஆம் தேதி 30 வயதான இஸ்மானிரா அந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இஸ்மானிரா-விற்கு அத்தண்டனையை விதித்தது.
அரசு தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எதிரான போதிய முகாந்திரங்களை தற்காப்பு தர்ப்பினர் சமர்ப்பிக்க தவறியதால் நீதிபதி டாக்டர் சியாலிசா வார்னோ அத்தீர்ப்பை அளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)