Ad Banner
Ad Banner
 பொது

ஆயுதமேந்தி கலவரம் வழக்கு விசாரணைக்கு உதவ ஏழு ஆடவர்கள் ஒரு பெண் கைது

22/12/2025 06:28 PM

கோலாலம்பூர், டிசம்பர் 22 (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை ஜோகூர், மாசாய், பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஆயுதமேந்தி நடத்தப்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு ஏழு ஆடவர்களையும் ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

அப்பகுதியில் உள்ள ஒரு சீன உணவகத்தில் இரவு மணி 11.05 அளவில் அச்சம்பவம்
நிகழ்ந்ததாக ஜோகூர் பாரு தென் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் பொறாமை உணர்வினால் அச்சம்பவம் ஏற்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏசிபி ரவூப் செலாமாட் கூறினார்.

சுமார் 20 பேர் கொண்ட குழு நெகிழி நாற்காலிகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தி இருவரைத் தாக்கியதில் ஒருவருக்கு முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 17 முதல் 46 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே சில குற்றப் பதிவுகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆயுதம் அல்லது ஆபத்தான பொருளைக் கொண்டு கலவரம் செய்ததற்காகக் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 148இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)