Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சீ விளையாட்டுப் போட்டி; இலக்கைக் கடந்து 231 பதங்கங்களை வென்று மலேசியா சாதனை

20/12/2025 05:42 PM

பேங்காக், டிசம்பர் 20 (பெர்னாமா) -- 200 பதங்களை வெல்லும் இலக்கைக் கடந்து 231 பதங்கங்களைக் கைப்பற்றி மலேசியா 2025ஆம் ஆண்டு தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியை நிறைவு செய்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டியில் மலேசியா 57 தங்கம், 57 வெள்ளி மற்றும் 117 வெண்கலப் பதக்கங்களை வென்று நான்காவது இடத்தைப் பிடித்தது.

தேசிய வுஷு விளையாட்டாளரான தான் சியோங் மின் சிறந்த வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தேசிய நீச்சல் வீரர் ஹியூ ஹோ ஏன் சிறந்த விளையாட்டு வீரராக அங்கீகாரம் பெற்றார்.

அனுபவம் வாய்ந்த விளையாட்டாளர்களைத் தவிர்த்து இம்முறை களமிறக்கப்பட்ட 646 புதிய விளையாட்டு வீரர்களில் 34 விழுக்காட்டினர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இது நாட்டின் விளையாட்டு துறைக்கு நேர்மறையான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

2027ஆம் ஆண்டில் மலேசியா சீ விளையாட்டை ஏற்று நடத்தவிருக்கும் நிலையில் தேசிய விளையாட்டாளர்களின் இந்த அடைவுநிலை உறுதியான அடித்தளமாக அமையும் என்று தேசிய விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குநர் ஜெஃப்ரி ஙாடிரின் தெரிவித்தார்.

''இம்முறை தேசிய விளையாட்டாளர்களின் சாதனைகளில் தேசிய விளையாட்டு சங்கம் மிகவும் திருப்தி அடைந்துள்ளது. எதிர்காலத் திட்டங்களை வடிவமைக்க ஒ.சி.எம் மற்றும் ஐ.எஸ்.என் விளையாட்டு சங்கங்களுடன் நாங்கள் தொடர்ந்து விவாதிப்போம். 2027 சீ விளையாட்டுப் போட்டிக்கு விளையாட்டு வீரர்களைத் தயார்ப்படுத்துவதற்கு இதுவே எங்களின் முன்னுரிமையாக இருக்கும்'', என்றார் ஜெஃப்ரி ஙாடிரின்.

செபாக் டக்ரா, ஜுடோ, தடகளம், குறி சுடுதல் மற்றும் muay தாய் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் மலேசியா சிறந்த மற்றும் நிலையான அடைவுநிலையை பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)