Ad Banner
Ad Banner
 பொது

இவ்வாண்டின் மிக அதிகமாக 153 கோடி ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல்

20/12/2025 03:40 PM

ஜாலான் ஹாங் துவா, டிசம்பர் 20 (பெர்னாமா) -- மூன்று மாடி ஆடம்பர வீடொன்று சட்டவிரோத ஆய்வகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் அனைத்துலக அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கையை முறியடித்துள்ளனர்.

இதன்வழி இவ்வாண்டின் மிக அதிகமாக153 கோடி ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை JSJN இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்று வட்டாரத்தில் Op Gaharu நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நான்கு அதிரடி சோதனையில் பல்வேறு வகையான 18 டன்னிற்கும் மேற்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக  டத்தோ ஹுசேன் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அக்கும்பலின் பின்னணியில் செயல்பட்ட 24 முதல் 39 வயதிற்கு உட்பட்ட மூன்று உள்நாட்டு ஆடவர்களும் மூன்று பெண்களும் சம்பந்தப்பட்ட ஆடம்பர வீட்டில் கைது செய்யப்பட்டனர்.

தொடர் பரிசோதனை மற்றும் விசாரணையின் வழி, செராஸ் மற்றும் சிலாங்கூர், காஜாங் வட்டாரங்களில் உள்ள தொழில்துறை பகுதிகளில் சில தொடர் அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

''போதைப்பொருட்களைப் பதப்படுத்துவதற்காகக் குடியிருப்பு வீடுகள் மற்றும் வணிக வளாகங்களைச் சட்டவிரோத ஆய்வகங்களாகப் பயன்படுத்தி இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இவை அனைத்துலகச் சந்தைக்காக என்று நம்பப்படுகிறது. இந்த கும்பல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது'', என்றார் டத்தோ ஹுசேன் ஒமார் கான்.

இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

அதேவேளையில் அச்சோதனையின்போது இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதிலேயே மிக அதிக மதிப்பிலான 4,041 கிலோகிராம் கோகைன் வகை போதைப்பொருளைப் பதப்படுத்தும் ஆய்வகத்தின் நடவடிக்கையையும் போலீசார் முறியடித்தனர்.

அதோடு 14,493 கிலோகிராம் கெதாமின் மற்றும் மூன்று கிலோகிராம் எம்.டி.எம்.ஏ ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்க அனைவரும் டிசம்பர் 23ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்‌ஷன் 39Bஇன் கீழ் இதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை