சிலாங்கூர், டிசம்பர் 20 (பெர்னாமா) -- மறைந்த டத்தோ ஶ்ரீ புங் மொக்தா ரடினின் மகன் ஹமட் நயிம் குர்னியாவன் கினபத்தாஙான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அத்தொகுதியில் தலைமைத்துவத்தின் தொடர்ச்சியைப் பேணுவதற்கும் தமது தந்தையின் எஞ்சிய பதவிக் காலத்தைத் தொடர முகமட் ஹமட் நயிம்-க்கு வாய்ப்பளிப்பதற்கும் தேர்வு செய்யப்பட்டதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
''கினபத்தாஙான் நாடாளுமன்றத்திற்கான தேமு வேட்பாளர், நயிம் குர்னியாவன் புங் மொக்தார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்புகிறேன். நான் அவரை அழைத்து, கினபத்தாஙானில் பிரச்சாரத்தைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.'' என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி
இன்று, சிலாங்கூர், செகிஞ்சன், டதரான் பாதூ 23, சுங்காய் நிபொங்-கில் டெசா கிரானா திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் அஹ்மாட் சாஹிட் அந்த அறிவிப்பைச் செய்தார்.
ஹமட் நயிம் வேட்பாளராக நியமிக்கப்பட்டது அத்தொகுதியை தற்காக்க மட்டுமல்ல. மாறாக, சபா மக்கள் கூட்டணி GRS-சுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அண்மையில் நிறைவடைந்த 17 சபா மாநில தேர்தலுக்குப் பின்னர் தமது வேட்பாளரை நியமிக்கப்போவதில்லை எனும் முடிவும் ஒரு காரணமாகும் என்றும் டாக்டர் அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார்.
இதனிடையே, லமாங் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், சில பெயர்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதால், இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)