கோலாலம்பூர், டிசம்பர் 20 (பெர்னாமா) -- மலேசிய ஹலால் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இஸ்லாம் அல்லாத பிற மதப் பண்டிகைகளுடன் தொடர்புடைய படங்கள், விளக்கப்படங்கள் அல்லது அலங்காரங்களைப் பயன்படுத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை.
இருப்பினும் அது ஹலால் கொள்கையைப் பாதிக்காமல் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று மத விவகாரங்களுக்கான பிரதமர் பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி ஹசான் தெரிவித்தார்.
இஸ்லாம் மதத்தைத் தவிர்த்து பிற இன கொண்டாட்டத்துடன் தொடர்புடைய அலங்காரங்கள், படங்கள், ஆபரணங்கள் மற்றும் விளக்கப்படங்கள் அனுமதிக்கப்படுவதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டாக்டர் சுல்கிப்ளி ஹசான் கூறினார்.
ஹலால் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இஸ்லாம் அல்லாத பிற மதப் பண்டிகைகள் தொடர்பான படங்கள், விளக்கப்படங்கள் அல்லது அலங்காரங்களைப் பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று 2023ஆம் ஆண்டு JAKIM எடுத்த முடிவுக்கு இணங்க இது அமல்படுத்தப்படுகிறது.
இம்முடிவு மலேசிய ஹலால் சான்றிதழைக் கொண்ட சமையலறை அல்லது தங்கும் விடுதி வளாகங்களில் இஸ்லாம் அல்லாத பண்டிகைகளுக்கான அலங்காரங்களுக்கும் பொருந்தும்.
இதனிடையே மலேசியாவில் கலாச்சார மற்றும் மத பன்முகத்தன்மைக்குப் மரியாதை அளிக்கும் வகையில் இன நல்லிணக்கத்தின் அம்சத்தைப் புறக்கணிக்காமல் தற்போதுள்ள ஹலால் தரநிலைகளைத் தொடர்ந்து பின்பற்ற ஊக்குவிக்கப்படுவதாக டாக்டர் சுல்கிப்ளி குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)