சிரம்பான், டிசம்பர் 20 (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான் ரெம்பாவின் பெடாஸ், கம்போங் பத்து 4 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதைக்கப்பட்ட பையில் பெண்ணின் உடல் கண்டுடெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபருக்கு இன்று முதல் ஏழு நாள்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த தடுப்பு காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் நூருல் ஃபரா சுலைமான் பிறப்பித்ததாக நெகிரி செம்பிலான் போலீஸ் துணைத் தலைவர் SAC முஹமட் இட்ஸாம் ஜாஃபர் தெரிவித்தார்.
51 வயதான அச்சந்தேக நபர் ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திலிருந்து காலை மணி சுமார் 9.45 அளவில் சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கொலை குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் முதல் சந்தேக நபர் மலாக்காவில் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 41 வயதான இந்த இரண்டாம் நபர் கெந்திங் செம்பா பகுதியில் கைதானார்.
வரும் வியாழக்கிழமை வரை இவர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்.
கொலையுண்ட பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அவரது உண்மையான அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அப்பெண் மூன்று நாள்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)