பேராக், டிசம்பர் 15 (பெர்னாமா) -- சிம்பாங் பூலை-இல் போலீஸ் உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியில் சுட்டு கத்தியால் குத்திய சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அந்த சந்தேக நபர் ஓட்டிச் சென்ற காருக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படும் நிலையில் அவரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் புக்கிட் அமான் உட்பட பல்வேறு தொடர்புடைய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் கூறினார்.
''இதுவரை, இந்த சந்தேக நபர் வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகின்றது. எனவே, அவரை கண்டுபிடிக்க புக்கிட் அமான் தரப்பினருடனும், சம்பந்தப்பட்ட பிற தரப்பினருடனும் இணைந்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த சந்தேக நபர் வெளிநாட்டில் இருப்பதால், அவரை கண்டறியும் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். இவ்வழக்கின் நிர்வகிப்பில் பல்வேறு பிற அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.'' என்றார் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின்.
திங்கட்கிழமை ஈப்போவில் உள்ள UNISEM-மில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் அவ்வாறு கூறினார்.
அந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டு காயத்திற்கு ஆளான போலீஸ் உறுப்பினரின் நலன் கருதி மேல் சிகிச்சைக்காக அவர் தமது பிறந்த மாநிலமான சரவாக்கிற்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)