Ad Banner
Ad Banner
 

தரவுகளைப் பாதுகாப்பாகப் பகிரும் KWSP-யும் மலேசிய குடிநுழைவுத்துறையும்

11/12/2025 07:46 PM

கோலாலம்பூர், டிசம்பர் 11 ( பெர்னாமா) --  தற்காலிகப் பணி வருகை அனுமதி அட்டை வேலைவாய்ப்புக்கான அனுமதி அட்டை மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டில் பணிபுரிவதற்கு அனுமதிக்கக் கூடிய இன்னும் பிற சட்டப்பூர்வ அனுமதி ஆவணங்கள் தொடர்பான தரவை ஊழியர் சேமநிதி வாரியம் K-W-S-P-யும் மலேசிய குடிநுழைவுத்துறை J-I-M-ம்மும் தற்போது துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் பகிர்ந்து வருகின்றன.

குடியுரிமை இல்லாத தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமநிதி வாரியத்தின் கட்டாய உறுப்பினர் திட்டத்தின் அமலாக்கத்தை ஆதரிப்பதற்காக அவ்விரு தரப்பினருக்கும் இடையே ஒரு வியூக ஒத்துழைப்புக் குறிப்பில் கையெழுத்திட்டதன் வழி இந்த கூட்டமைப்பு உருவாகியுள்ளது.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தின் போது இந்த வியூக ஒத்துழைப்பு கையெழுத்திடப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் KWSP குறிப்பிட்டுள்ளது.

சரிபார்ப்பு செயல்முறையை ஆக்கப்பூர்வமாக அமல்படுத்த உதவும் அமைப்பு மற்றும் தரவு செயல்பாட்டை வலுப்படுத்துவது உட்பட அமலாக்க ஆற்றலை மேம்படுத்தவும் இந்த ஒத்துழைப்பு வழிவகுக்கும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 60,000 முதலாளிகள் மூலம் 13 லட்சம் பணியாளர்கள் KWSP-இல் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

இந்த அடைவு நிலை பொறுப்பான முதலாளிகள் மத்தியில் நேர்மறையான தொடக்கத்தை காட்டுவதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கட்டாய உறுப்பிய நிபந்தனையைப் பின்பற்றத் தவறும் முதலாளிகள் இன்னும் உள்ளதாகக் கூறிய KWSP இதனால் அம்முதலாளிகளை உட்படுத்திய குடியுரிமை இல்லாத ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு நிலை பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)